செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ.1,898 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2019-12-18 02:26 GMT   |   Update On 2019-12-18 02:26 GMT
தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக மத்திய அரசு ரூ.1,898 கோடி வழங்கியுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
சென்னை :

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில், 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு, நிதி மந்திரி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அவ்வப்போது கூட்டப்பட்டு, வரி விதிப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 37 முறை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது. முதலில் நடைபெற்ற கூட்டங்களில் தமிழகத்தில் இருந்து அமைச்சர் கே.பாண்டியராஜன் பங்கேற்று வந்தார். தற்போது மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு வருகிறார்.

இந்த கூட்டங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கோரிக்கை விடுத்து வருகிறார். இதேபோல் பிரதமர் நரேந்திரமோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோதும், இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. (ஐ.ஜி.எஸ்.டி.) நிலுவைத்தொகையாக ரூ.4,072.03 கோடியும், ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ.3,236.32 கோடியும் மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில், 38-வது கூட்டம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில், அனைத்து மாநில மந்திரிகளும் கலந்துகொண்டு, தங்களது கருத்துகளை தெரிவிக்க இருக்கின்றனர்.



தமிழகத்தில் இருந்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்க இருக்கிறார். இதற்காக அவர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இந்த நிலையில், ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட நேற்று முன்தினம் மத்திய அரசு ரூ.35,298 கோடி ஒதுக்கியது.

இந்த நிதியில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக, அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர் நேற்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

மத்திய அரசு ஒதுக்கியுள்ள ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையில் இருந்து தமிழகத்திற்கு ரூ.1,898 கோடி நிதி கிடைத்துள்ளது. மேலும், பாக்கி இழப்பீடு தொகையை பெறவும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேநேரத்தில், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை பெறுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படும்.

இந்த 2 தொகைகளையும் வழங்க வேண்டும் என்று 38-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்த இருக்கிறேன். மேலும், மாதந்தோறும் வழங்க வேண்டிய பாக்கி இழப்பீடு தொகையையும் உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Tags:    

Similar News