செய்திகள்
வாக்காளர் பட்டியல்

தமிழகம் முழுவதும் துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

Published On 2019-12-17 03:04 GMT   |   Update On 2019-12-17 03:04 GMT
தமிழகம் முழுவதும் துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டு விட்டது. கடந்த ஜூன் 30-ந் தேதி வரை சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் அதில் உள்ளன. அதன்பின்பும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு தொடர்பாக கடந்த 6-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.



அவற்றில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டு துணைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் துணைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

அடுத்த மாதம் (ஜனவரி) 25-ந் தேதி 10-வது தேசிய வாக்காளர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் வாக்காளர் தினம் கொண்டாடப்படும். வாக்குச்சாவடிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

‘வலுவான ஜனநாயகத்துக்கான வாக்காளர்களின் அறிவு’ என்ற கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் தினத்தை கடைப்பிடிக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வாக்காளர் தினத்தன்று பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News