செய்திகள்
மொழுகம்பூண்டி பொதுமக்கள் - கலெக்டர் கந்தசாமி

சிறந்த கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மொழுகம்பூண்டியில் அடிப்படை வசதி இல்லை - பொதுமக்கள் புகார்

Published On 2019-12-16 08:11 GMT   |   Update On 2019-12-16 08:11 GMT
நாட்டிலேயே சிறந்த கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரணி அருகே உள்ள மொழுகம்பூண்டியில் அடிப்படை வசதி இல்லை என்று கலெக்டர் கந்தசாமியிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து வாழப்பந்தல் செல்லும் வழியில் மொழுகம்பூண்டி கிராமம் உள்ளது. மத்திய அரசால் மி‌ஷன் அந்தியோதயா திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டதாக மொழுகம்பூண்டி கிராம ஊராட்சி முதலிடம் பிடித்து தேர்வு செய்யப்பட்டது.

மத்திய அரசால் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்ட மொழுகம்பூண்டி கிராமத்திற்கு கலெக்டர் கந்தசாமி திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் இக்கிராமத்தில் இந்திய அளவில் அரசால் வழங்கப்படுகிற திட்டங்கள் முழுமையாக பணிகள் நிறைவேற்றப் பட்டதாகவும் அதற்காக இக்கிராமத்தை சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்துள்ளதாகவும் இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கி மாதிரி கிராமமாக தேர்வு செய்து பட்டியல் தயாரிக்கப்படும் என்றார்.

அப்போது கலெக்டர் கந்தசாமியிடம் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

மேலும் அவர்கள் தங்களுடை கிராமம் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டதை பத்திரிகைகள் பார்த்து தெரிந்து கொண்டோம் எங்கள் ஊரில் குடிநீர் வசதி, சாலை வசதி இல்லை அடிப்படை தேவைகளுக்காக 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆரணிக்கு செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கும் அங்கு தான் செல்ல வேண்டும். போக்குவரத்தும் போதுமான பஸ் வசதி இல்லை.

எனவே சாலை, குடிநீர், போக்குவரத்து, மருத்துவ வசதி செய்து தரவேண்டும். அடிப்படை வசதி இல்லாத மொழுகம்பூண்டி எப்படி சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பினர். இதனால் பரபரப்பு எற்பட்டது. பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார்.
Tags:    

Similar News