செய்திகள்
தீப்பிடித்து எரிந்த குடோன்

குடோன்களில் தீ விபத்து - ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2019-12-16 07:57 GMT   |   Update On 2019-12-16 07:57 GMT
புழல் அருகே 2 குடோன்களில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:

புழலை அடுத்த காவாங்கரை தண்டல்கழனி ஜி.என்.டி. சாலை அருகே தனியாருக்கு சொந்தமான 4 குடோன்கள் உள்ளன.

இதில் ஒரு குடோனில் கெமிக்கல் பேரல்களும் மற்றொரு குடோனில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மரப்பொருட்கள் இருந்தன.

அருகில் இருந்த மற்ற 2 குடோன்களில் அட்டை பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் கெமிக்கல் பேரல்கள் இருந்த குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் கெமிக்கல் பேரல்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. அப்போது அருகில் இருந்த வீட்டு உபயோக பர்னிச்சர் குடோனில் தீபரவியது.

2 குடோன்களிலும் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் லோகநாதன், தென்னரசு, பாலசுப்பிரமணியம் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.

செம்பியம், அம்பத்தூர், செங்குன்றம், மாதவரம், தண்டையார்பேட்டை, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் 18 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 15 மெட்ரோ வாட்டர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. கெமிக்கல் பொருட்களில் தீப்பற்றியதால் அதை அணைப்பதில் பெரும் சவால் ஏற்பட்டது.

அருகில் இருந்த மற்ற 2 குடோன்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர். காலை 11 மணி வரை தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்தது. இந்த தீ விபத்தில் 2 குடோன்களில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்தன. சுமார் ரூ. 5 கோடிக்கு மேல் பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கும் என்று தெரிகிறது.

தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாதவரம் துணை கமி‌ஷனர் ரவளிபிரியா, புழல் உதவி கமி‌ஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News