செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 25-ந்தேதி கன்னியாகுமரி வருகை

Published On 2019-12-16 07:03 GMT   |   Update On 2019-12-16 07:03 GMT
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் வருகிற 25-ந் தேதி நடைபெறும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள பாறையில் பகவதி அம்மனின் பாத தடம் பதிந்து உள்ள பகுதியில் கடந்த 1892-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் சுவாமி விவேகானந்தர் தியானம் செய்தார்.

அதன்பிறகு சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் உரையாற்றி உலகப்புகழ் பெற்றார். சுவாமி விவேகானந்தர் தியானம் செய்ததை நினைவுகூறும் வகையில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறையில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு உள்ளது.

1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் ஜனாதிபதி வி.வி.கிரி இந்த நினைவு மண்டபத்தை திறந்துவைத்தார். அப்போது ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளராக இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஏக்நாத்ஜி ராணடே இந்த நினைவு மண்டபத்தை நிறுவினார். சிற்பி எஸ்.கே. ஆச்சாரி இதை வடிவமைத்தார். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா இந்த நினைவு மண்டபத்தை நிர்வகித்து வருகிறது.


தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் 3 படகுகளை இயக்கி வருகிறது. விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி தொடங்கியது. ஒரு ஆண்டு பொன்விழாவை கொண்டாட விவேகானந்த கேந்திரா முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கேந்திரா நிர்வாகிகள் சந்தித்தனர். பொன் விழா கொண்டாட்டத்தை ஜனாதிபதி தொடங்கி வைத்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழக முதல் எடப்பாடி பழனிசாமியையும் அவர்கள் சந்தித்தனர்.

விவேகானந்த கேந்திர துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுச்செயலாளர் பானுதாஸ், துணைத்தலைவர் நிவேதிதா, இணை பொதுச்செயலாளர் பிரவின் தபோல்கர், துணை பொதுச்செயலாளர் ரேகாதவே ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். தொடர்ந்து பொன்விழா கொண்டாட்டம் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் வருகிற 25-ந் தேதி நடைபெறும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். முன்னதாக அவர் படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்று பார்வையிடுகிறார்.

இந்த தகவலை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ் தெரிவித்தார்.
Tags:    

Similar News