செய்திகள்
நகைகடையில் விசாரணை நடத்திய போலீசார்.

மார்த்தாண்டத்தில் நகைக்கடையை உடைத்து 140 பவுன் நகை கொள்ளை

Published On 2019-12-15 10:20 GMT   |   Update On 2019-12-15 10:20 GMT
மார்த்தாண்டத்தில் நகைக்கடையை உடைத்து 140 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழித்துறை:

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர் (வயது 45).

இவர், மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பில் சிலங்கா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி வருகிறார். கடையின் பின்புறமே அவரது வீடு அமைந்துள்ளது.

நேற்று காலை ஜாண் கிறிஸ்டோபர் கடையை திறந்து வியாபாரம் செய்துள்ளார். பிறகு இரவு நகை கடையை மூடி விட்டு ஜாண் கிறிஸ்டோபரும், கடை ஊழியர்களும் சென்று விட்டனர்.

இன்று காலை 6 மணியளவில் ஜாண் கிறிஸ்டோபர், தனது நகை கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையின் பின்புற ‌ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடைக்குள் சென்று பார்த்தார்.

அப்போது அங்கிருந்த 140 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. நகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கு ஷோகேஸ்களில் வைத்திருந்த தங்க செயின், வளையல், மோதிரம், கம்மல் என்று பலவிதமான நகைகளும் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.


இந்த துணிகர கொள்ளை பற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக போலீசார் கொள்ளை நடந்த கடைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கடையின் பின்புற பூட்டை உடைத்து கொண்டு கொள்ளையன் ஒருவன் உள்ளே செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.

போலீசார் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க அந்த கொள்ளையன் ஹெல்மெட் அணிந்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மோப்ப நாய் வரவழைத்து துப்பு துலக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் மூலம் நகைக்கடையில் பதிவாகி உள்ள கொள்ளையனின் கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்தனர்.

இந்த துணிகர கொள்ளையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. அவர்களை பிடிக்க அனைத்து போலீஸ் சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் மார்த்தாண்டம் நகரம் முழுவதும் போலீசார் வாகன சோதனையும் நடத்தப்பட்டது.

140 பவுன் நகையை அள்ளிச் சென்ற கொள்ளையன் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், கண்காணிப்பு கேமிரா காட்சி மூலம் போலீசாருக்கு கொள்ளையர்கள் பற்றி சில துப்பு கிடைத்துள்ளது. அதை வைத்து பழைய குற்றவாளிகள் புகைப்படத்துடன் ஒப்பிட்டு கொள்ளையரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மார்த்தாண்டம் நகரில் சமீபத்தில்தான் ஒரு வணிக வளாகத்தில் புகுந்த கொள்ளையன் ஒரே நாள் இரவில் 3 கடைகளில் பணம் மற்றும் கம்ப்யூட்டர் உள்பட பொருட்களை கொள்ளையடித்து சென்றான். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் நகை கடையில் கொள்ளை நடந்துள்ளது.

இதனால் கொள்ளையர்களை உடனடியாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இரவு நேர ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News