செய்திகள்
திருமாவளவன்

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்

Published On 2019-12-14 10:04 GMT   |   Update On 2019-12-14 10:56 GMT
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழகத்தில் வலுவான போராட்டம் நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை:

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

பாசிச அரசியலை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.-ன் நீண்ட கால கனவு திட்டங்களை தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஒவ்வொன்றாக செய்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தனர், அவர்கள் நீண்ட கால கனவான ராமர் கோவில் கட்டுவதை அயோத்தியா தீர்ப்பு மூலம் நிறைவேற்றினர், அதன் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள், ஈழ தமிழர்களை புறக்கணிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர்.

மக்கள் விரும்பாத இந்த மசோதாவை, அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி இரண்டு அவைகளிலும் நிறைவேற்றி உள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட வருடங்களில் மட்டும் பங்களாதேஷ், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் மட்டும் குடியுரிமை வழங்குவது என்பது, மதத்தை, நாட்டை கூறுபோடும் செயலாகும்.

மத்தியில் இன்னும் 4 ஆண்டுகள் தாங்கள் தான் ஆட்சியில் இருப்போம் என்று மக்களவையில் பேசும் போக்கை விசிக வன்மையாக கண்டிக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக, தேசத்திற்கு ஒப்பாத வகையில் நடைபெறும் நடவடிக்கைகள் இது.

எனவே ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி தேசத்தை காக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தனி தனியே போராட்டம் நடத்தினாலும் ஒன்றிணைந்து போராட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி வட மாநிலங்களில் போராட்டம் நடைபெறுவதை போன்று வலுவான போராட்டம் தமிழகத்தில் நடைபெற வேண்டும். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

மாநிலங்களவையில் அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த குடியுரிமை மசோதா நிறைவேறாமல் இருந்து இருக்கும். மிக சொற்ப எண்ணிக்கையில் இந்த மசோதா தோல்வி அடைந்து இருக்கும்.

எனவே அ.தி.மு.க. தன் நிலைப்பாட்டை பரிசீலனை செய்ய வேண்டும். இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு செய்யும் துரோகம் என்பதை வி.சி.க. சுட்டிக் காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், மாநில நிர்வாகிகள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி, பார்வேந்தன், தகடூர் தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, இரா.செல்வம், வி.கோ.ஆதவன், விடுதலை செழியன், வீர.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News