செய்திகள்
சிறுமிகள் மீட்பு

கொத்தடிமையாக ரூ.20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட சிறுமிகளை போலீசார் மீட்டனர்

Published On 2019-12-14 03:26 GMT   |   Update On 2019-12-14 03:26 GMT
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சிறுமிகளை ரூ.20 ஆயிரத்துக்கு கொத்தடிமையாக அவர்களது பாட்டி விற்றதையடுத்து, தனியார் நிறுவனத்திற்கு சென்ற போலீசார் 2 சிறுமிகளையும் மீட்டனர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வெள்ளகுளம் தெருவை சேர்ந்தவர் காளியப்பன். விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், கவிதா(வயது 11), சங்கீதா(11) என 2 மகள்கள் உள்ளனர். இரட்டையர்களான இவர்கள் இருவரும் குடவாசலில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

காளியப்பனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இவர் தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். தனலட்சுமி மட்டும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அவர் ஒருவரின் வருமானத்தை மட்டுமே வைத்து இவர்களின் குடும்பம் நடந்து வந்ததால் இவர்களது குடும்பத்தை வறுமை வாட்டியது. இதனால் காளியப்பன் தனது தாயார் விஜயலட்சுமி, அவரது தங்கை கனகம் ஆகியோரிடம் தனது மகள்கள் இருவரையும் பள்ளியை விட்டு நிறுத்தப்போவதாகவும், அவர்கள் ஏதாவது வேலைக்கு செல்லட்டும் என்றும் கூறினார். இந்த நிலையில் நீடாமங்கலத்தை சேர்ந்த சகுந்தலா என்பவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சகோதரிகள் இருவரையும் வேலைக்கு சேர்த்து விடுவதாக சிறுமிகளின் பாட்டி விஜயலட்சுமியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பேத்திகள் இருவரையும் ரூ.20 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கொத்தடிமையாக வேலைபார்க்க பாட்டி விஜயலட்சுமி விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த திருவாரூர் ‘சைல்டு லைன்’ அலுவலக பணியாளர்கள் குடவாசல் போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்ற குடவாசல் போலீசார், அங்கு இருந்த 2 சிறுமிகளையும் மீட்டு குடவாசலுக்கு அழைத்து வந்தனர்.

Tags:    

Similar News