செய்திகள்
துரைமுருகன்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பா.ஜனதாவின் வீழ்ச்சிக்கு அடிகோலும்: துரைமுருகன்

Published On 2019-12-14 02:10 GMT   |   Update On 2019-12-14 02:10 GMT
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பா.ஜனதாவின் வீழ்ச்சிக்கு அடிகோலும் என்றும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
சென்னை :

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, தாயகம் கவி உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அப்போத துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய நாட்டின் உள்துறை மந்திரி அமித்ஷா ஜனநாயகத்தின் முதுகெலும்பை முறிக்கும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார். இந்த சட்டத்தின் நோக்கம் அன்னிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்து இந்தியாவில் தங்கி இருப்பவர்களை இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்வது ஆகும். அது எல்லாருக்கும் பொதுவாக இருந்தால், அந்த சட்டத்தை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால், சிறுபான்மையினர்களை பழிதீர்க்கும் வகையிலும் அந்த சட்டம் அமைந்து இருக்கிறது.



வெளிநாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வரும் புத்த, சமண, இந்து, கிறிஸ்துவ மதத்தினரை இந்தியா குடிமக்களாக அனுமதிக்கும் இந்த சட்டம், இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து வந்திருக்கும் தமிழர்களையும் இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்ளதாம். எனவே இது தமிழ் இனத்துக்கும், சிறுபான்மை யினருக்கும் எதிரான சட்டம் என்பது எங்கள் வாதம்.

எனவே, இது ஜனநாயக முதுகெலும்பை முறிக்கிற சட்டம், சிறுபான்மையினருக்கு எதிரான உயிர்க்கொல்லி, தமிழர்களை பழிவாங்கும் சட்டம் என்று தி.மு.க. மிகத் தெளிவாக தெரிந்து இருக்கிறது. அந்த வெறுப்பை காட்டுகின்ற வகையில் இளைஞர் அணியினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அந்த சட்டத்தை வீதிதோறும் கிழித்து எறிந்து இருக்கிறார்கள். அவர்களை மிகப்பெரிய குற்றம் செய்தவர்களை போல் கைது செய்து இருக்கிறார்கள். ஆனால், ஒன்றை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் தி.மு.க. இளைஞர் அணி பட்டாளம் வீறுகொண்டு எழுந்து இருக்கிறது. இந்த வீறுகொட்டத்தை அடக்குகிற சக்தி அரசுக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சட்டமும் தெரியாது, குடியுரிமை திருத்த சட்டமும் தெரியாது. இது தமிழனுக்கு எதிரானது என்பதும் தெரியாது.

ஆனால், பா.ஜனதா அரசின் வீழ்ச்சிக்கு இந்த சட்டம் தான் அடிகோலும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலிலேயே இதற்கான சரியான பாடத்தை மக்கள் கற்பிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News