செய்திகள்
முத்தரசன்

தமிழகத்தில் நாளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்- முத்தரசன்

Published On 2019-12-13 10:41 GMT   |   Update On 2019-12-13 10:41 GMT
குடியுரிமை மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை 14-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி:

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 6 மாதம் நிறைவு செய்துள்ள நிலையில் நாடு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சிறு தொழில் செய்பவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வெங்காயம், பூண்டு உள்ளிட்டவைகளின் விலைவாசி உயர்ந்து வருகிறது. இதையெல்லாம் மறைக்க பல சட்டங்களை இயற்றி மக்களை திசை திருப்பி வருகிறார்கள்.

நாட்டிற்கு எதிராக தேச துரோகத்தை பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கை. இதை பா.ஜ.க அரசு செய்துள்ளது. இஸ்லாமிய மக்கள், தமிழ் மக்களுக்கு எதிராக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை 14-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழ்நாட்டில் லாட்டரி உள்ளிட்ட மோசடிகள் தொடர்ந்து போலீசார் உதவியோடு நடைபெறுகிறது. சமூக விரோதிகளுக்கும் காவல் துறையினருக்கும் கூட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறுமா? என்பது தெரியவில்லை.

பல மாவட்டங்களில் பிரதிநிதிகள் ஏலம் விடப்படுகிறார்கள். இது தொடர்பாக கொலைகள் நடைபெறுகிறது. இதையெல்லாம் ஆளுங்கட்சியினர் தான் செய்கிறார்கள். தேர்தல் ஆணையம் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகப் பூர்வமாக நடக்க வாய்ப்பில்லை. அதற்கு எந்தவித அறிகுறியும் இல்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிகாரப்பலத்தை முழுவதுமாக பயன்படுத்தி அனைத்து இடங்களையும் கைப்பற்ற ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி என்ன விரும்புகிறாரோ, அதை தேர்தல் ஆணையர் அப்படியே நிறைவேற்றுகிறார்.


ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அரசியல் ரீதியாக செயல்படுத்தும் கட்சி தான் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கொள்கையைத்தான் பா.ஜ.க. செயல்படுத்துகிறது. அவர்கள் ஒற்றை மதம், ஒற்றை கலாச்சாரம் என்கிற ஆர்.எஸ்.எஸ். கொள்கை அடிப்படையில் பா.ஜ.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க. தற்போது பா.ஜ.க.வின் பினாமி கட்சியாகிவிட்டது. அதனால் தான் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு இரு அவைகளிலும் ஆதரித்து நியாயம் பேசி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு மக்கள்தான் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறையில் நடந்தால் தி.மு.க. கூட்டணி தான் வெற்றிபெறும். இந்த அரசு 2021 வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தி கொண்டேயிருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News