செய்திகள்
தற்கொலை செய்துகொண்டவர்கள்.

பாலில் சயனைடு கலந்து கொடுத்து 3 குழந்தைகளை கொன்று கணவன்- மனைவி தற்கொலை

Published On 2019-12-13 05:47 GMT   |   Update On 2019-12-13 05:47 GMT
விழுப்புரத்தில் பாலில் சயனைடு கலந்து கொடுத்து 3 குழந்தைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகரை சேர்ந்தவர் அருண் குமார்(வயது 34). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமிசுந்தரி(28) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு பிரியதர்ஷினி(4), யுவஸ்ரீ(3), பாரதி(1) ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். அருண்குமார் அந்த பகுதியில் நகை பட்டறை வைத்து நகை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது நகை பட்டறையில் 5 பேர் வேலை பார்த்து வந்தனர்.
 
இதனால் அவர் பல இடங்களில் கடன் வாங்கி தொழில் செய்தார். அதிலும் நஷ்டம் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். அருண்குமாரால் பணத்தை கொடுக்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து அவர் 3 நெம்பர் லாட்டரி சீட்டுகளை கட்டு கட்டாக வாங்கினார். அதிலும் அவருக்கு பரிசுகள் விழவில்லை. இதனால் மேலும் கடன் தொகை அதிகரித்தது. குடும்பம் நடத்த முடியாமல் தவித்தார். வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

இதுகுறித்து அருண் குமார் அவரது மனைவி சிவகாமிசுந்தரியிடம் கூறினார். அவரும் தற்கொலை செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

நேற்று மாலை அருண்குமார் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்பு சயனைடு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார். இரவு 10 மணியளவில் அருண்குமார் பாலில் சயனைடு கலந்தார். அதன்பின்பு தனது மனதை கல்லாக்கி கொண்டு தனது 3 குழந்தைகளுக்கு கொடுத்தார்.

பால் குடித்த சிறிது நேரத்தில் 3 குழந்தைகளும் மயங்கி விழுந்தனர். அதன்பின்னர் சிவகாமிசுந்தரியும் அந்த பாலை குடித்தார். அவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அதன்பின்பு அருண்குமார் மதுவில் சயனைடு கலந்து குடித்து விட்டார்.

முன்னதாக 3 குழந்தைகளுக்கும் பாலில் சயனைடு கலந்து கொடுத்து விட்டு நானும், மனைவியும் தற்கொலை செய்துகொண்டோம் என அருண்குமார் செல்போனில் வீடியோவை பதிவு செய்து அவரது நண்பர்களுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்தார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு அருண்குமார், அவரது மனைவி சிவகாமி சுந்தரி மற்றும் அவரது குழந்தைகள் பிரியதர்ஷினி, யுவஸ்ரீ, பாரதி ஆகியோர் மயங்கி கிடந்தனர்.


இதற்கிடையே இந்த தகவல் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மற்றும் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தெரியவந்தது. அவர்களும் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு மயங்கி கிடந்த 5 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் 5 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

அருண்குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரத்தில் லாட்டரி சீட்டுகளை வாங்கி கடன்தொல்லை அதிகரித்ததால் நகை பட்டறை தொழிலாளி அருண்குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாட்டரி சீட்டு மற்றும் கடன்தொல்லையால் தான் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதாக அருண்குமார் கூறியுள்ளார்.
விழுப்புரம் நகரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளும், 3 நெம்பர் லாட்டரிகளும் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு இடங்களில் லாட்டரி சீட்டுகள் விற்ற 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News