செய்திகள்
இந்தியன் ஆயில் நிறுவனம்

‘கியாஸ்’ கொண்டு வருபவருக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டாம்- இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

Published On 2019-12-13 04:55 GMT   |   Update On 2019-12-13 04:55 GMT
சிலிண்டர் வினியோகம் செய்பவருக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டாம் என இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை:

வீடுகளுக்கு ‘கியாஸ்’ சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளில் தளங்களுக்கு ஏற்ப ரூ.20 முதல் 100 வரை கூடுதல் கட்டணம் வலுக்கட்டாயமாக வசூலிக்கின்றனர்.

இது தொடர்பாக சிலிண்டர் நிறுவனங்களுக்கு புகார் தெரிவித்தும் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்பவருக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டாம் என இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் சிலிண்டர்கள், தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செய்யப்பட்ட பின்னரே பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. சிலிண்டர் வினியோகம் செய்யும் போது ரசீதில் சில்லறை விலை தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும்.


சில்லரை விலை என்பது வாடிக்கையாளர்களின் சமையல் அறை வரை சிலிண்டரை டெலிவரி செய்வதற்கான தொகையாகும். வாடிக்கையாளர்கள் ரசீதில் உள்ள விலைக்கு மேல் டெலிவரி செய்பவருக்கு தொகை எதுவும் கொடுக்க வேண்டாம். இந்தியன் ஆயில் நிறுவனம் ‘டிப்ஸ்’ வழங்குவதை என்றுமே ஆதரிப்பதில்லை.

எனவே ரசீதில் உள்ள சில்லரை விலைக்கு மேல் தொகை கோரப்பட்டால் வாடிக்கையாளர் இண்டேன் சேவை மையத்தை காலை 9.30 மணி முதல் மாலை 5.15 வரை தொடர்பு கொண்டு புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போல விபத்து மற்றும் கசிவு போன்ற அவசர உதவிக்கு 1906 என்ற எண் மற்றும் இதர புகார்களுக்கு 18002333555 என்ற இலவச எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News