செய்திகள்
கோப்பு படம்

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஓட்டல் உரிமையாளரின் காரை திருடி சென்ற டிரைவர் கைது

Published On 2019-12-12 10:47 GMT   |   Update On 2019-12-12 10:47 GMT
போரூர் அருகே வேலைக்கு சேர்ந்த முதல் நாளிளேயே ஓட்டல் உரிமையாளரின் காரை திருடி சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையை சேர்ந்தவர் வாசுதேவன். சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவரிடம் நெல்லை மாவட்டம் வானூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் நேற்று புதிதாக டிரைவர் வேலைக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வாசுதேவனை காரில் டிரைவர் கார்த்திக் அழைத்து சென்றார்.

வணிக வளாகத்துக்குள் சென்ற வாசுதேவன் பொருட்கள் வாங்கி விட்டு திரும்பிய போது டிரைவர் கார்த்திக் காருடன் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து வடபழனி போலீசில் வாசுதேவன் புகார் செய்தார். உதவி கமி‌ஷனர் ஆரோக்யபிரகாசம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் பூபாலன் ஆகியோர் காரில் இருந்த வாசுதேவனின் ‘ஐபோன்’ எண்ணை ‘டிராக்’ செய்தனர்.

அதை வைத்து காரில் பின் தொடர்ந்து சென்ற போலீசார் கல்பாக்கம் அருகே மது போதையில் பதுங்கி இருந்த டிரைவர் கார்த்திகை நள்ளிரவு 2 மணி அளவில் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே டிரைவர் கார்த்திக் காரை திருடி சிக்கிக் கொண்டார். போலீசார் விரைந்து செயல்பட்டு புகார் தெரிவித்த 3 மணி நேரத்தில் காரை மீட்டு, டிரைவரை கைது செய்து உள்ளனர்.
Tags:    

Similar News