செய்திகள்
பழ கருப்பையா

முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தி.மு.க.வில் இருந்து விலகினார்

Published On 2019-12-12 07:38 GMT   |   Update On 2019-12-12 07:38 GMT
தி.மு.க.வில் சில காலம் பேச்சாளராக வலம் வந்த முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
சென்னை:

துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து பேசிய பழ.கருப்பையா தி.மு.க.வில் இணைந்தார்.

தி.மு.க.வில் சில காலம் பேச்சாளராக வலம் வந்த பழ.கருப்பையா அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபின் தி.மு.க.வில் சேர்வதில் எனக்கு தயக்கம் இருந்தது.

ஒரு பொது விழாவில் கலைஞர் மிகைபடச் சொன்னாரோ என எண்ணும் அளவுக்கு என்னை வலியுறுத்தி அழைத்தார்.

கலைஞர் மறைந்த அன்றே தி.மு.க.வைவிட்டு வெளியேறுவது குறித்துச் சிந்தித்தேன். பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்புணர்வு, பாராளுமன்றத்தேர்தல் என இவற்றின் காரணமாக அந்த முடிவு தள்ளிக்கொண்டே போய்விட்டது.

கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனைப் பாங்குகள், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலக் கட்சியை நடத்துகின்ற விதம், அறிவும் நேர்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பணமே எல்லாம் என்று கருதுகின்ற தன்மை, இவையெல்லாம் என்னிடம் பெரிய மனச்சலிப்பை உண்டாக்கி இருந்தன.

இவற்றோடு பொருந்திப் போக முடியாத நிலையில், தி.மு.க.வைவிட்டு ஒதுங்கிக்கொள்வது என்றும் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து விலகிக் கொள்வது என்றும் முடிவெடுத்தேன். நேரடியாக ஸ்டாலினைப் பார்த்து விடையும் பெற்றேன்.

ஊழல்வாதிகளை முன்னிலைப்படுத்துவது, ஊழலைப் பொதுவாழ்வின் அங்கமாக ஏற்பது, உட்கட்சிக்குள்ளேயேகூட விமர்சிக்க முடியாதவாறு கட்சி விசுவாசம் என்னும் பெயரால் அவற்றை நிலை நாட்டுவது, இவையெல்லாம் எந்த வகையிலும் பொது வாழ்க்கைக்கு ஏற்புடையவை அல்ல.

மாநிலங்களைப் பல கூறுகளாக உடைப்பது, இந்தியாவை இந்து என்னும் பொது அடையாளத்துக்குள் கொண்டு வருவது, இவையெல்லாம் மொழிவழி இன உணர்வைச் சிதைக்கின்ற போக்குகளாகும்.

கடந்த 5 ஆண்டுகளாக ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது. இது அல்ல மாற்று அரசியல் என்னும் கருத்தே என்னுடைய விலகலுக்கான காரணம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் பழ.கருப்பையா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசியல் கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்பட்டு வருகிறது. விளம்பர ஏஜென்சிகள் அரசியல் கட்சிகளுக்குள் புகுந்துவிட்டன. தமிழகத்தில் கவர்ச்சியான மாயை மிகுந்த அரசியல் போக்கு தற்போது உள்ளது.

காமராஜர், ராஜாஜி, கலைஞர் போன்று தற்போது யாரும் இல்லை. கொள்கைகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள். தமிழக அரசியல் வணிக நிறுவனம் அல்ல. மக்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு விளம்பர யுக்திகளை அரசியல் கட்சிகள் கையாண்டு வருகிறார்கள்.

ஜனநாயகம் மிகப்பெரிய அமைப்பாகும். தற்போது அயோக்கியத்தனம் ஜனநாயகத்தில் புகுந்துள்ளது. கூட்டணி என்ற பெயரில் ஜால்ரா கட்சிகள் பல இணைந்துள்ளன.

அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டாமல் மறைக்கிறார்கள். ஜனநாயகம் பாழ்பட்டு விட்டது.

எம்.எல்.ஏ., எம்.பி. சீட்டுகளுக்கு தேர்தலின் போது நீ எத்தனை கோடி செலவு செய்வாய்? என்று நேர்காணலில் பேரம் பேசுகிறார்கள். கவுன்சிலர் சீட்டுகள் ரூ.50 லட்சம், ரூ.1 கோடி என பேரம் பேசப்படுகிறது. அவர்கள் பதவிக்கு வந்த பிறகு செலவழித்த பணத்தை எடுப்பதிலேயே குறியாக செயல்படுவார்கள். பொது சேவை என்பது குறைந்து விட்டது.

அரசியலில் அறிவாளிகளுக்கு இடமில்லை. பொதுக்குழுவில் விவாதங்கள் நடைபெறுவது இல்லை. தீர்மானத்தை முன்கூட்டியே எழுதி நிறைவேற்றுகிறார்கள்.

தற்போது தி.மு.க.வில் இருந்து விலகி உள்ளேன். வேறு எந்த கட்சியிலும் இணையும் சூழல் தற்போது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News