செய்திகள்
10 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயண ராவ் நடத்தி வைத்தார்.

ஏப்ரல் மாதம் ரஜினி முழுமையாக அரசியலுக்கு வருவார்- சத்யநாராயண ராவ்

Published On 2019-12-12 05:11 GMT   |   Update On 2019-12-12 05:11 GMT
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரஜினி தனது முழுமையான அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:

ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியாக 10 ஜோடிகளுக்கு இலவச சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இன்று காலை 6 மணிக்கு திருப்பூர் கொங்கணகிரி முருகன் கோவிலில் இந்த திருமணம் நடைபெற்றது. இதனை ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயண ராவ் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஜினியின் அரசியல் வருகை குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. நிச்சயமாக அடுத்த ஆண்டு (2020)ஏப்ரல் மாதத்தில் ரஜினி தனது முழுமையான அரசியல் அறிவிப்பை வெளியிடுவார். அரசியலுக்கு வர தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


திரைப்படம் வெளியாகும் போது மட்டும் ரஜினி அரசியல் பேசுவதாக அமைச்சர்கள் விமர்சனம் செய்கின்றனர். அது அவர்களது சொந்த கருத்து. அதை பற்றி எதையும் ரஜினி மனதில் வைத்துக் கொள்வதில்லை.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி தெரிவித்துவிட்டார். அரசியலில் ரஜினி, கமல் இணைந்து செயல்படுவது குறித்து அனைவரிடமும் கலந்து பேசிய பிறகே முடிவு எடுப்பார்கள். ரஜினியின் கருத்துக்கள் எப்போதும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆன்மீகம் என்பது தர்மம், நியாயமாகும். அதனாலேயே ரஜினியின் அரசியலும் அதை சார்ந்து இருக்கும். பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் ரஜினிக்கு நண்பர்கள் உள்ளனர்.

அதன் அடிப்படையிலேயே அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் ரஜினியை சந்திக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News