செய்திகள்
கைது

ஆண்டிக்குளம் அருகே சொந்த தேவைக்காக கஞ்சா பயிரிட்டு வளர்த்த 4 பேர் கைது

Published On 2019-12-11 09:26 GMT   |   Update On 2019-12-11 09:26 GMT
ஆண்டிக்குளம் அருகே சொந்த தேவைக்காக கஞ்சா பயிரிட்டு வளர்த்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆத்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகில் உள்ள ஆண்டிக்குளம் பகுதியில் கஞ்சா பயிரிட்டு வளர்த்து வருவதாக செம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆண்டிக்குளம் ஓடை புறம்போக்கு பகுதியில் 3 செண்ட் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்க்கப்பட்டிருந்தன. இதனையடுத்து அந்த செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

நரசிங்கபுரத்தை சேர்ந்த பிரேம் என்ற பட்டி (வயது23), அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த சடையாண்டி என்ற ஜான் (19), சபரிராசன் (19), ராம்கி (22) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கூறுகையில் 4 பேரும் கூலி வேலை பார்த்து வருகிறோம்.

எங்களுக்கு கஞ்சா பழக்கம் உள்ளது. இதற்காக வெவ்வேறு இடங்களுக்கு சென்று வாங்கி வருவோம். சில நேரங்களில் கஞ்சா கிடைக்காது எனவே நாங்களே கஞ்சா செடிகளை வளர்க்க ஆசைப்பட்டோம். இதற்காக ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில் கஞ்சா விதைகளை போட்டு வளர்த்தோம். அது நன்றாக வளரவே தினசரி அதனை பார்த்து பராமரித்து வந்தோம்.

அவ்வப்போது செடிகளை பறித்து உலர்த்தி அதனை பயன்படுத்தி வந்தோம் என்றனர். போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News