செய்திகள்
வெங்காயம்

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை குறைந்தது

Published On 2019-12-11 08:10 GMT   |   Update On 2019-12-11 08:10 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.
போரூர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழை காரணமாக வெங்காயம் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை திடீரென அதிகரித்தது.

மொத்த விற்பனையில் ரூ. 180 வரையிலும் சில்லரையில் ரூ. 200-க்கு மேல் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்தது.

மொத்த வியாபாரிகள் 10 டன், சில்லரை வியாபாரிகள் 2 டன் வரை மட்டுமே வெங்காயம் கையிருப்பு வைத்து இருக்க வேண்டும் என்றும் வெங்காய பதுக்கலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. முதல் கட்டமாக எகிப்து வெங்காயம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

ஆனால் பெரும்பாலும் ஓட்டல் தேவைக்காக மட்டுமே எகிப்து வெங்காயத்தை மூட்டைகளாக வாங்கி செல்கின்றனர். சுவை குறைவு சிகப்பு நிறம் உள்ளிட்ட காரணங்களால் எகிப்து வெங்காயத்திற்கு பொதுமக்கள் இடையே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து அதிகரித்து உள்ளது. இன்றும் 50 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்துள்ளது.

இதில் எகிப்து வெங்காயம் 2 லாரிகளில் மட்டுமே வந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் மொத்த விற்பனையில் இன்று நாசிக் வெங்காயம் மற்றும் பெங்களூர் வெங்காயம் முதல் ரகம் 1 கிலோ ரூ. 100-க்கும் 2வது ரகம் ரூ. 80க்கும், ஆந்திரா வெங்காயம் முதல் ரகம் ரூ. 60-க்கும், 2-வது ரகம் ரூ.40-க்கும் எகிப்து வெங்காயம் ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சில்லரை விற்பனையில் நாசிக் வெங்காயம் கிலோ ரூ. 120-க்கும் ஆந்திரா வெங்காயம் கிலோ ரூ. 90-க்கும் விற்கப்படுகிறது. பூண்டு மொத்த விற்பனையில் சிறியது ரூ. 120-க்கும் பெரியது ரூ. 170க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ. 150-க்கு தொடர்ந்து விற்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வியாபாரி கார்த்திக் கூறும்போது, ‘கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில நாட்களாக 10 டன் வரை வந்து கொண்டிருந்த சின்ன வெங்காயம் வரத்து குறைந்து. இன்று 4 டன் மட்டுமே வந்துள்ளது.

சின்ன வெங்காயம் சிறியது ரூ. 130-க்கும் பெரியது ரூ. 150-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. “ஈரமான” சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு மேலும் ஒரு மாதம் வரை நீடிக்கும்’ என்றார்.

Tags:    

Similar News