செய்திகள்
வெங்காயம்

திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு இன்று 120 டன் பெங்களூரு வெங்காயம் வந்தது

Published On 2019-12-11 06:11 GMT   |   Update On 2019-12-11 06:11 GMT
திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு இன்று காலை 120 டன் பெங்களூரு பெரிய வெங்காயம் வந்தது. நடுத்தர அளவில் உள்ள இந்த வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.
திருச்சி:

தமிழகத்தில் வெங்காய வரத்து குறைந்ததால் திடீர் விலையேற்றம் ஏற்பட்டது. சென்னை போன்ற பெரு நகரங்களில் 1 கிலோ வெங்காயம் ரூ.200 வரை விற்கப்பட்டது. திருச்சியில் அதிகபட்சமாக ரூ.160-க்கு விற்கப்பட்டது. இதையடுத்து பற்றாக்குறையை போக்க எகிப்தில் இருந்து தமிழகத்திற்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் 30 டன் எகிப்து வெங்காயம் வந்தது. ஏற்கெனவே ரூ.160 வரை வெளிமாநில வெங்காயம் விற்கப்பட்ட நிலையில் எகிப்து வெங்காயத்திற்கு ரூ.100 விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த வெங்காயம் உள்ளூர் வெங்காயத்தை போல் இல்லாமல் கருப்பு நிறமாக காணப்பட்டதால் பொதுமக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டினர்.

இதையடுத்து நேற்று ரூ.90 ஆக விலை குறைக்கப்பட்டது. இருப்பினும் விற்பனை ஏறவில்லை. மூன்று நாட்களாகியும் 30 டன் எகிப்து வெங்காயத்தை விற்று தீர்க்க முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர். இதுவரை 25 டன் விற்பனையாகி உள்ள நிலையில் 5 டன் எகிப்து வெங்காயம் தேக்கமடைந்துள்ளது. இன்றைக்கு மேலும் விலையை குறைத்து ரூ.80-க்கு விற்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு 120 டன் பெங்களூரு பெரிய வெங்காயம் வந்தது. நடுத்தர அளவில் உள்ள இந்த வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.60-க்கு விற்கப்படுகிறது. இந்த வெங்காயத்தை இல்லத்தரசிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதுபற்றி திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்க செயலாளர் தங்கராஜ் கூறியதாவது:-

எகிப்து வெங்காயத்தை பொதுமக்கள் விரும்பி வாங்காமல் இருப்பதால் மீண்டும் வியாபாரிகள் அந்த வெங்காயத்தை வரவழைக்கவில்லை. ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் எகிப்து வெங்காயத்தில் 5 டன் விற்காமல் உள்ளது. அதனை இன்னும் 8 தினங்களுக்குள் எப்படியாவது விற்க வேண்டும். இல்லையென்றால் அழுகும் நிலை உள்ளது.

இந்தநிலையில் இன்று பெங்களூரில் இருந்து வந்த 120 டன் பெரிய வெங்காயம் விறுவிறுவென விற்பனையாகி வருகிறது. இன்று இந்த வெங்காயம் முழுமையாக விற்று தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.

பொதுவாக கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை பெரிய வெங்காயம் விற்பனையாகும் காலகட்டத்தில் திருச்சி மார்க்கெட்டில் தினமும் 300 டன் வெங்காயம் விற்பனையாகும். அதேபோன்று சின்ன வெங்காயமும் 300 டன் விற்பனையாகும். வெங்காய விலையேற்றத்தால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து தற்போது 100 முதல் 150 கிலோ வரை தான் விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தை பொறுத்தமட்டில் நேற்றைய விலையே இன்றைக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல்தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், இரண்டாம் தர வெங்காயம் ரூ.20 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. வட மாநில வெங்காய வரத்து அதிகரித்து வருவதால் அடுத்த சில தினங்களில் வெங்காய விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.

Tags:    

Similar News