செய்திகள்
கோப்பு படம்

பிளஸ் 2 மாணவியிடம் சில்மி‌ஷம் - பொதுமக்களிடம் சிக்கிய ஆசிரியர்

Published On 2019-12-10 12:23 GMT   |   Update On 2019-12-10 12:23 GMT
நாகர்கோவில் அருகே பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை பொதுமக்கள் அடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவரை பொது மக்கள் அடித்து உதைக்கும் காட்சிகள் நேற்று முன்தினம் வாட்ஸ்-அப்பில் பரவியது.

பொது மக்களிடம் சிக்கிய ஆசிரியரை கோட்டார் போலீசார் மீட்டு செல்லும் காட்சியும் வாட்ஸ்-அப்பில் பதிவாகி இருந்தது. அந்த ஆசிரியர் பிளஸ் 2 மாணவியை விடுமுறை நாளான நேற்று முன்தினம் பள்ளிக்கு அழைத்து அவரிடம் சில்மி‌ஷம் செய்ததாகவும், இதை கண்ட பொதுமக்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆசிரியரை பொதுமக்கள் பிடியில் இருந்து மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

கோட்டார் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ஆசிரியர் நாகர்கோவில் குளத்தூரை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 30) என தெரியவந்தது.

அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த சுரேஷ் குமார், பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்ததால் அவரை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, விசாரணை நடத்தி ஆசிரியர் சுரேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தார்.

மேலும் சுரேஷ்குமாரின் செல்போனை கைப்பற்றி அதில் இருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது சுரேஷ் குமார் அடிக்கடி மாணவியுடன் சேட்டிங் செய்ததும், செல்போனில் ஆபாச படங்களை சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆசிரியர் சுரேஷ்குமார் ஆபாச படங்களை மாணவிக்கு அனுப்பினாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்காக மாணவியின் செல்போனை கைப்பற்றி அதனையும் மகளிர் போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது அதிலும் பல தகவல்கள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இது மகளிர் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பற்றியும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே பொதுமக்களால் தாக்கப்பட்ட ஆசிரியர் சுரேஷ்குமாரும் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில்கூறியிருப்பதாவது:-

பள்ளிக்கு மாணவ- மாணவிகளை அழைத்து செல்லும் வாகனம் வைத்துள்ளேன். அதனை பள்ளி வளாகத்தில் நிறுத்தி இருப்பேன். சம்பவத்தன்று அந்த வாகனத்தை கழுவிக் கொண்டிருந்த போது மாணவி அங்கு வந்தார்.

அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அக்கம் பக்கத்தினர் என்னை அடித்து உதைத்து விட்டனர். கொலை மிரட்டலும் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News