செய்திகள்
கோப்பு படம்

களக்காடு அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் - கணவர் உள்பட 9 பேர் மீது வழக்கு

Published On 2019-12-10 11:37 GMT   |   Update On 2019-12-10 11:37 GMT
களக்காடு அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கணவர் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி ராஜபுதூரை சேர்ந்த வளர்மதி (வயது 25) என்பவருக்கும், வடுவூர்பட்டியை சேர்ந்த விஜயன் என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் கணவன், மனைவி இருவரும் வடுவூர்பட்டியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். அப்போது கணவர் விஜயனும், அவரது குடும்பத்தினரும் வளர்மதி அழகாக இல்லை என்று கூறி அவரை மனதளவில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் விஜயனும், வளர்மதியும் மும்பைக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்து 2 மாதத்தில் மீண்டும் வடுவூர்பட்டிக்கு வந்தனர். அங்கு கணவரின் உறவினர்கள் வளர்மதியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதனிடையே வளர்மதி கர்ப்பமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை ராஜபுதூருக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தற்போது 3 வயதாகிறது. அதன் பின்னர் விஜயன் தனது மனைவியை பார்க்க வரவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சம்பவத்தன்று வளர்மதி தனது குழந்தையுடன் கணவரை பார்க்க வடுவூர்பட்டிக்கு சென்றார். ஆனால் அங்கு அவர் இல்லை. வீட்டில் இருந்த அவரது மாமியார் பத்திரத்தாய் மற்றும் உறவினர்கள் வளர்மதியை வீட்டை விட்டு வெளியேற்றி, மீண்டும் வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. மேலும் விஜயன் மற்றொரு பெண்னுடன் மும்பையில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து வளர்மதி நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வளர்மதியின் கணவர் விஜயன், மாமியார் பத்திரத்தாய், மாமனார் பெருமாள் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News