உத்தமபாளையத்தில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தமபாளையத்தில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
பதிவு: டிசம்பர் 10, 2019 17:04
அரிவாள் வெட்டு
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அப்பச்சிபிள்ளை தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் நாகேந்திரன் (வயது22). இவர் தேனியில் ஒரு தனியார் மில்லில்வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் வேலைக்கு சென்ற இவர் இரவு வெகுநேரம் வரை வீடு திரும்பவில்லை. இதனால் நாகேந்திரன் வீட்டினர் அவரை பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் உத்தமபாளையம் பீட்டர் காலனி காளவாசல் அருகே ரோட்டோரம் நாகேந்திரன் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்துசென்று நாகேந்திரனை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால் பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாகேந்திரனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரை அரிவாளால் வெட்டியவர்கள் யார்? எதற்காக வெட்டினார்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகேந்திரன் வெட்டப்பட்டு கிடந்த இடம் அருகே அரசு மதுக்கடை உள்ளது. எனவே மது குடிக்கும் தகராறில் அவரை யாரும் வெட்டினார்களா? அல்லது பெண் விவகாரத்தில் வெட்டப்பட்டாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.