செய்திகள்
கோப்புப்படம்

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 107 பேர் மனு தாக்கல்

Published On 2019-12-10 07:56 GMT   |   Update On 2019-12-10 07:56 GMT
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 107 பேர் மனு தாக்கல் செய்தனர்.
நாகர்கோவில்:

தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

குமரி மாவட்டத்தில் 5 யூனியன்களுக்கு முதல் கட்டமாகவும், 4 யூனியன்களுக்கு 2-வது கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

95 பஞ்சாயத்து அலுவலகங்கள், 9 யூனியன் அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று 107 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 7 பேரும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 4 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 96 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

2-வது நாளான இன்றும் ஏராளமானோர் மனு தாக்கல் செய்ய பஞ்சாயத்து அலுவலகங்களில் குவிந்தனர். இது போல யூனியன் அலுவலகங்களிலும் மனு தாக்கலுக்கு காலையிலேயே பலர் வந்திருந்தனர்.

இப்பதவிகள் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதால் பலரும், ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்ய கூடி இருந்தனர்.

மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். இதற்கான வேட்பாளர்களை கட்சியின் தலைமை அறிவிக்கும். ஆனால் முக்கிய கட்சிகள் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இதனால் நேற்று மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதே நேரம் சுயேச்சைகளும் இந்த பதவிக்கு மனு தாக்கல் செய்யவில்லை.

உள்ளாட்சி பதவிகளில் போட்டியிடுவோர் தேர்தலுக்காக எவ்வளவு பணம் செலவு செய்யலாம்? என்ற விபரத்தையும் தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன்படி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் ரூ.9 ஆயிரம் வரை மட்டுமே பணம் செலவிட வேண்டும்.

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் ரூ.34 ஆயிரம், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவோர் ரூ.85 ஆயிரம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவோர் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News