செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

குற்றவாளிகள் உருவாவதற்கு பெற்றோரும், பள்ளிகளுமே காரணம் - புதுவை கவர்னர் கிரண்பேடி

Published On 2019-12-10 06:48 GMT   |   Update On 2019-12-10 12:14 GMT
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் உருவாவதற்கு பெற்றோரும், பள்ளிகளுமே காரணம் என புதுவை கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி மனம் திறந்த மடல் என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான மிருகத்தனமான தாக்குதல்கள் ஏன் மீண்டும், மீண்டும் நடக்கின்றன? பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் ஓரணியில் திரண்டதுபோல இதற்கு நாம் ஒன்றுகூடவில்லை.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக நாம் ஓரணியில் திரளாவிட்டால் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் தொடரத்தான் செய்யும். இதனை வேரறுக்க நாம் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

நாம் அமைதியாக இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்கள் வெளியே தெரியாதவாறு நசுக்கப்படுகிறது. பெண்கள் தங்கள் அநீதியை வெளியில் சொல்ல குடும்பத்தினர் முன்வருவதில்லை, இதனால் வாழ்நாள் முழுவதும் அவமானத்துடன் அந்த பெண் வாழ வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் அநீதியை வெளியே சொல்லாவிட்டால் எரிக்கப்படுவார்கள். இதுதான் தற்போது நடக்கும் உண்மை.

நாம் தற்போது பிரச்சினைகளின் ஆணிவேரைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்காமல் விடுவதால்தான் இதுபோன்ற பிரச்சினைகள் எழுகிறது.

உண்மையான மனநோயை ஆரம்பத்திலேயே அகற்ற வேண்டும். ஒரு சிலரின் மனநோயால் இந்திய சமூகம் மோசமான நிலையை சந்தித்து, நாட்டின் நற்பெயர் பாதிக்கப்பட்டு வருகிறது. பாலியல் வன்கொடுமையின் ஆணி வேர் என்ன? இதை யார் செய்கிறார்கள்? அவர்களின் மனதில் மிருகத்தனம் வந்தது எப்படி? அவர்களின் மனிதநேயம் ஏன் தொலைந்தது? என எனக்குள் நான் கேள்வி கேட்கிறேன்.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் ஒரு தாயின் வயிற்றில்தானே பிறந்தார்கள்? அவர்களுக்கு சகோதர, சகோதரிகள் இல்லையா? அவர்களுக்கு குழந்தைகள் இல்லையா? அவர்கள் மற்றவர்களால் நேசிக்கப்படவில்லையா? தங்கள் வீடுகளில் இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டு இதுதான் வாழ்க்கை என நினைக்கிறார்களா? என எண்ண தோன்றுகிறது.

இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பலருடன் உரையாடினேன். சிறை நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடினேன். இதற்கு பதில், குற்றவாளிகள் தங்கள் குடும்பங்களால் புறக்கணிக்கப்படுவதுதான் காரணமாக உள்ளது. இதனால் மோசமான பழக்க வழக்கத்தால் தங்கள் சரீர தேவையை பூர்த்தி செய்ய தவறான வழிகளை தேர்வு செய்கின்றனர்.

இதுபோன்ற நபர்களிடம் கேள்வி கேட்க பெற்றதாய் பயப்படுகிறார், தந்தை நிராகரிக்கிறார். உறவினர்களும் அவருடன் பேச அஞ்சுகின்றனர். இது போன்ற காரணங்களால் பள்ளி தேர்வுகளில் தோல்வியடைந்து வெளியேற்றப்படுகின்றனர். தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள முன்வராமல் தவறான வழிகளை அவர்கள் தேர்வு செய்கிறார்கள்.

பெற்றோரும், ஆசிரியர்களும் கைவிடாவிட்டால் வீதிகளில் பெண்களை அவர்கள் நாடமாட்டார்கள். இதுபோன்று திரிவோரை கண்காணிக்க போலீசில் உரிய கண்காணிப்பு திட்டங்களும் இல்லை. இதனால் அவர்கள் சுதந்திரமாக தங்கள் தவறுகளை செய்கின்றனர், அவர்களை சமூகம் தட்டிக்கேட்க அஞ்சுகிறது.

எனவே இவர்களை கண்காணிக்க போலீஸ் கண்காணிப்பு குழுக்கள் அவசியமாக தேவைப்படுகிறது. எந்த குழந்தையும் பிறக்கும்போது குற்றவாளிகளாக பிறப்பதில்லை, புறக்கணிப்புதான் அவர்களை மாற்றுகிறது. இதுபோன்ற தவறான செயல்களுக்கு பெற்றோரும், பள்ளிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

சட்டத்தால் அவர்கள் கண்காணிக்கப்படவும் வேண்டும். இதற்கான சரியான நேரம் இது. நம்முன்னோர்கள் வழிகாட்டிய நல்ல நடைமுறைகளை நாம் தொடர வேண்டும்.

ஒரு குற்றவாளி ஜாமீன் பெறும்போதும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். சிறையிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு நபரையும் பீட் போலீசார் அறிந்திருக்க வேண்டும். குற்றவியல் நீதி அமைப்புடன் காவல்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் மகள்களை இழக்கும் வீடுகளில் மகிழ்ச்சி தொலையத்தான் செய்யும்.

மனிதநேயத்தை ஊக்குவிக்கும் மதிப்புக்கல்வி கட்டாயப்படுத்த வேண்டும். ஒவ்வொரு குற்றத்திற்கும் படிப்பினையை கற்றுக்கொண்டு செயல்பட்டால் தான் இனிவரும் குற்றங்களை தடுக்க முடியும்.

நிர்பயா, உன்னாவ், தெலுங்கானா சம்பவங்கள் தான் இதற்கு சான்று. இந்த சம்பவங்கள் தவிர்த்திருக்கப்பட்டிருக்க வேண்டியவை.

இவ்வாறு கவர்னர் கிரண்பேடி தனது மடலில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News