வேலூர் அண்ணா சாலையில் இன்று காலை திருவண்ணாமலை பஸ்சில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இன்று காலை திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு அரசு பஸ் வந்துகொண்டிருந்தது.
அண்ணாசாலையில் திருப்பதி தேவஸ்தானம் அருகே வந்தபோது திடீரென பஸ் என்ஜீனில் தீ பற்றி புகை மண்டலம் ஏற்பட்டது. இதனால் திடுக்கிட்ட டிரைவர் பஸ்சை நடுரோட்டில் நிறுத்தினார். பயணிகள் அலறி அடித்துக்கொண்டு வேகமாக இறங்கினர். புகை அதிகமாக வந்ததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அண்ணாசாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.