செய்திகள்
திண்டுக்கல் வெங்காய பேட்டையில் குடிமைபொருள்வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல் வந்த 210 டன் வெங்காயம் குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2019-12-10 05:15 GMT   |   Update On 2019-12-10 05:15 GMT
தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து 210 டன் வெங்காயம் திண்டுக்கல் வந்த நிலையில் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

திண்டுக்கல்:

வெங்காய விலை உயர்வு காரணமாக எகிப்து, துருக்கி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் வெங்காயபேட்டைக்கு எகிப்து நாட்டில் இருந்து 110 டன், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 100 டன் வெங்காயம் வந்தது. இதனால் கடந்த சில நாட்களாக ரூ.150-க்கு மேல் விற்கப்பட்ட வெங்காயம் ரூ.110 முதல் ரூ.130 என குறைந்தது.

அடுத்த சில நாட்களில் இன்னும் வெங்காயம் வரத்து அதிகரிக்கும் என்பதால் மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல்- பழனி சாலையில் வெங்காய தரகுமண்டி செயல்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து இங்கு கொண்டு வரப்படும் வெங்காயம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளாவுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.


தற்போது வெளிநாட்டு வெங்காயம் இங்கு வந்துள்ள நிலையில் பதுக்கல் நடைபெறுகிறதா? என குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

இதேபோல் முக்கிய குடோன்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி கிருஷ்ணா தெரிவிக்கையில்,

வியாபாரிகள் 50 டன் வரை பல்லாரி, சின்னவெங்காயத்தை சேமித்து வைத்து விற்கலாம். சிறு வியாபாரிகளாக இருந்தால் 10 டன் வெங்காயத்தை இருப்பு வைத்து விற்கலாம். அதற்கு மேல் பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News