செய்திகள்
தீயணைப்பு படைவீரர்களுக்கு ரெயில்வே பாதுகாப்புத்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடற்பயிற்சி அளித்தபோது எடுத்த படம்

உடல்திறனை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு மினிமாரத்தான் ஓட்டம்

Published On 2019-12-09 17:48 GMT   |   Update On 2019-12-09 17:48 GMT
உடல்திறனை மேம் படுத்துவது குறித்து நடந்த மினிமாரத்தான் ஓட்டத்தை ரெயில்வே பாதுகாப்புத்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
நொய்யல்:

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள புகளூரில் நேற்று அதிகாலை தீயணைப்புத்துறையின் மத்திய மண்டலம் சார்பில் தீயணைப்புத்துறையினரின் உடல்திறனை மேம்படுத்துதல் மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதனை ரெயில்வே பாதுகாப்புத்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். புகளூர் ரெயில் நிலையம் முன்பு தொடங்கிய ஓட்டம் சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தது. இதில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் மத்திய மண்டலத்தை சேர்ந்த திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்புபடை வீரர்கள் கலந்து கொண்டு ஓடினர்.

இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு ஓடினர். இதையடுத்து ஓட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை சார்பில் தண்ணீர், குளுகோஸ் வழங்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படைவீரர்களுக்கு ரெயில்வே பாதுகாப்புத்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உடற்பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் மீனாட்சிவிஜயகுமார், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் விவேகானந்தன், துணை மாவட்ட அலுவலர் கணேசன், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்யாணகுமார், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News