செய்திகள்
கோப்பு படம்

கோவையில் நிதி நிறுவன அதிபர்-பேராசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

Published On 2019-12-09 10:42 GMT   |   Update On 2019-12-09 10:42 GMT
கோவையில் நிதி நிறுவன அதிபர் மற்றும் பேராசிரியர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை பேரூர் செட்டிபாளையம் அய்யாசாமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). நிதி நிறுவன அதிபர். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.

பின்னர் வீடு திரும்பினார். உள்ளே சென்று பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 19½ பவுன் தங்க நகைகள் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் பேரூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதிவாகிருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர். அப்போது பீரோவில் 2 கைரேகைகள் பதிவாகி இருந்தது. இதைதொடர்ந்து வீட்டின் முன்பக்கம் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

கோவை போத்தனூர் அருகே உள்ள ராஜலெட்சுமி நகரை சேர்ந்தவர் பொன்முருகன் (வயது 31). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் பொன்முருகன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டார். இன்று காலை குடும்பத்துடன் வீடு திரும்பிய அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை, 50 ஆயிரம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 2 டி.வி திருடு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொன் முருகன் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வீட்டில் நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News