செய்திகள்
விபத்து

நெல்லை அருகே கார்-ஆட்டோ மோதல்: பெண் பலி

Published On 2019-12-09 05:50 GMT   |   Update On 2019-12-09 05:50 GMT
நெல்லை அருகே கார்-ஆட்டோ மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் மலையன் குளத்தை சேர்ந்தவர் சண்முக வேல். இவரது மனைவி கனக மணியம்மாள்(வயது 60). இவரும் அதே ஊரை சேர்ந்த 8 பேரும் நாற்று நடும் பணி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று அதிகாலை வல்லநாடு அருகே உள்ள அகரம் பகுதிக்கு நடுவை பணிக்கு 9 பெண்களும் சென்றனர். அதற்காக வடக்குகாருக் குறிச்சியை சேர்ந்த பூரண பரமேஸ்வரன் என்பவரது ஆட்டோவில் அவர்கள் வந்தனர். ஆட்டோ மேலப்பாளையத்தை தாண்டி தெற்கு புறவழிச்சாலையில் வந்தது.

அதே நேரத்தில் நெல்லை சந்திப்பு பாலபாக்யா நகரை சேர்ந்த ஒருவர் தனது காரில் புதிய பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மேலப்பாளையம் சிக்னல் அருகே ஆட்டோ சாலையை கடக்க முற்பட்டது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோவும், காரும் பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ அங்கிருந்த போலீஸ் நிழற்குடை மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த கனகமணியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மலையன்குளம் பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி மனைவி சிங்காரி(60), மாடசாமி மனைவி கனியம்மாள்(50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஆட்டோவில் பயணித்த மனைவி ராசம்மாள்(60), கணபதி மனைவி இசக்கியம்மாள்(75) உள்பட 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த கனகமணி மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிங்காரி, கனியம்மாள் உள்பட 9 பேரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிங்காரி, கனியம்மாள் ஆகியோருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக் கிடமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவம் நடந்த தெற்கு புறவழிச்சாலையில் தொடர்ந்து இது போன்ற விபத்துகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இதனால் நெடுஞ்சாலை துறையினர் இந்த சிக்னலில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த பணியில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, மேம்பாலம் அமைத்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News