செய்திகள்
கடைக்குள் புகுந்த அரசு பஸ்.

நாகர்கோவிலில் அரசு பஸ் கடைக்குள் புகுந்தது- 4 பேர் காயம்

Published On 2019-12-08 15:14 GMT   |   Update On 2019-12-08 15:14 GMT
நாகர்கோவிலில் இன்று காலை அரசு பஸ் கடைக்குள் புகுந்தது. இதில் டிரைவர்-கண்டக்டர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

நாகர்கோவில்:

திருவனந்தபுரத்தில் இருந்து இன்று அதிகாலை தமிழக அரசு பஸ் ஒன்று நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வந்தது. பஸ்சில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை குழித்துறை மடத்து விளையைச் சேர்ந்த ரசல்ராஜ் (வயது 45) என்பவர் ஓட்டினார். மணலி மருதவிளையைச் சேர்ந்த தவசி (46) கண்டக்டராக இருந்தார்.

அதிகாலை 5 மணியளவில் பார்வதிபுரம் பாலத்தின் கீழ் பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவர் ரசல்ராஜின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறு மாறாக ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

திடீரென பஸ் பார்வதிபுரம் பாலத்தின் தூண் மீது மோதியது. உடனே டிரைவர் பஸ்சை மறு புறமாக திருப்பினார்.அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டோரத்தில் இருந்த கடைகளுக்குள் பஸ் புகுந்தது.

இதில், 2 கடைகளின் முன் பகுதி இடிந்து சேதமடைந்தது. பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து விழுந்தது. பஸ்சின் முன்பகுதியும் முழுமையாக சேதமடைந்தது. இதில் டிரைவர் ரசல்ராஜ், கண்டக்டர் தவசி மற்றும் பஸ் பயணிகள் தூத்துக்குடியைச் சேர்ந்த பலவேசம் (48), பாறசாலை புத்தன் வீட்டை சேர்ந்த சசி (62) ஆகி யோரும் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிரேன் மூலமாக கடைக்குள் புகுந்த பஸ்சை போலீசார் மீட்டனர்.

விபத்து நடந்த பகுதி காலை நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்த பகுதியில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கடைக்குள் அரசு பஸ் ஒன்று புகுந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News