செய்திகள்
நித்யானந்தா

நித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை

Published On 2019-12-08 06:22 GMT   |   Update On 2019-12-08 06:22 GMT
சீடர்கள் மூலமாகவே நித்யானந்தாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை:

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூரில் ஆசிரமம் அமைத்து பிரபலமானவர்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நித்யானந்தா ஆசிரமத்துக்கு கிளைகள் உள்ளன. வெளிநாடுகளிலும் ஏராளமான சீடர்கள் இருக்கிறார்கள்.

நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இளம்பெண்களும், சிறுமிகளும் சீடர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் ஹீராபூர் என்ற இடத்தில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏராளமான பெண்கள் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த தனது மகள்கள் இருவரை காணவில்லை என்று பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் திடீரென புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக குஜராத் ஐகோர்ட்டில் ஜனார்த்தன சர்மா ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது மகள்கள் லோபமுத்ரா, நந்திதா ஆகியோரை காணவில்லை என்றும் நித்யானந்தா  அவர்களை கடத்தி சென்று விட்டதாகவும் கூறியிருந்தார்.

தனது மகள்களை கண்டுபிடித்து ஒப்படைக்கக்கோரி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து குஜராத் ஐகோர்ட்டு போலீசாருக்கு பிறப்பித்த உத்தரவில், “உடனடியாக இளம் பெண்கள் இருவரையும் மீட்க வேண்டும்” என்று கூறியிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சில நாட்களுக்கு முன்பு குஜராத் ஐகோர்ட்டில் நடைபெற்றபோது, போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது இளம்பெண்கள் இருக்கும் இடம் தெரியவில்லை என போலீசார் கூறினார்கள். இதனை கண்டித்த ஐகோர்ட்டு 10-ந் தேதிக்குள் இளம்பெண்களை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து குஜராத் போலீசார் நித்யானந்தாவை கண்டுபிடித்து இளம்பெண்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். ஆனால் நித்யானந்தா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டது. நித்யானந்தாவை கண்டுபிடிக்க போலீஸ் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.

இதற்கிடையே நித்யானந்தா தென்அமெரிக்கா நாட்டில் உள்ள ஈக்வடார் தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசநாடு என பெயரிட்டு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

அங்கிருந்தபடியே நித்யானந்தா வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோக்களில் நித்யானந்தா மத்திய அரசுக்கு எதிராகவும், போலீசுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட வீடியோவில், “என்னை கொலை செய்வதற்கு 100 முறை முயற்சி நடந்ததாக தெரிவித்து இருந்தார். நான் ஒரு புறம்போக்கு, பரதேசி. என்னை யாரும் தொடக்கூட முடியாது. எந்த சட்டத்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது” என்றும் நித்யானந்தா ஆவேசமாக பேசி இருந்தார்.

இது போன்று தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தபோதிலும் நித்யானந்தா இருக்கும் இடத்தை குஜராத் போலீசாரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

இதையடுத்து நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியது. புதிதாக பாஸ்போர்ட் கேட்டு அவர் விண்ணப்பித்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்தார்.

இதன்மூலம் வெளிநாட்டில் தங்கியிருக்கும் நித்யானந்தா வேறு எங்கும் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஈக்வடார் தீவில் நித்யானந்தா தனிநாடு ஒன்றை உருவாக்கி இருப்பதாக வெளியான தகவலை தென்அமெரிக்கா மறுத்துள்ளது. இதனால் நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. அவர் எந்த வெளிநாட்டில் பதுங்கி இருக்கிறார் என்று இதுவரை உறுதியாக தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து நித்யானந்தாவை கைது செய்ய குஜராத் போலீசார் இன்டர்போல் உதவியையும் நாடியுள்ளனர்.

இதற்கிடையே குஜராத் போலீசார் சில நாட்களுக்கு முன்பே பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் பிடரி ஆசிரமத்துக்கு சென்றும் விசாரணை நடத்தினர். நித்யானந்தா வெளியிடும் வீடியோக்கள் இந்த ஆசிரமத்தில் இருந்தே வெளியாகிறது.

அவரது நெருங்கிய சீடர்கள் நித்யானந்தாவின் வீடியோக்களை யூ-டியூப் மூலமாக வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் மூலமாக நித்யானந்தாவை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நித்யானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்து இருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், நித்யானந்தா இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் நிலவுவதாகவே தெரிவித்து இருந்தது. இதனால் நித்யானந்தாவை கைது செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இருப்பினும் சைபர் கிரைம் போலீசார் மூலமாக நித்யானந்தாவை பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

நித்யானந்தா வெளியிடும வீடியோக்கள் எந்த இணையதளம் வழியாக வெளியாகிறது என்பதை கண்டுபிடித்து அதன்மூலமாகவே நித்யானந்தா இருக்கும் இடத்தை அறிவதற்கு குஜராத் மாநில சைபர் கிரைம் போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளதால் அவர்களும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

போலீஸ் பிடி இறுகுவதால் நித்யானந்தாவை விரைவில் கைது செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News