செய்திகள்
கோப்பு படம்

இணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்

Published On 2019-12-07 13:32 GMT   |   Update On 2019-12-07 13:32 GMT
இணையதளங்களில் ஆபாச படங்களை பார்ப்பவர்களின் செல்போன்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருவதாக வெளிவரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள மருதகுளம் கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞருக்கு, போலீஸ்காரர் ஒருவர் போன் செய்து பேசுவது போன்ற ஒரு ஆடியோ சமீபத்தில் வலைதளத்தில் வெளியானது. அந்த ஆடியோவில் பேசிய போலீஸ்காரர், ‘நீங்கள் ஆபாச இணையதளத்தில் குழந்தைகள் ஆபாச காட்சியை டவுன்லோடு செய்து பார்த்துள்ளீர்கள்.

அரசு சார்பாக அது குற்றம் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் நீங்கள் பார்த்ததால் உங்களுக்கு எச்சரிக்கை செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். ஆனால் அதன் பிறகும் நேற்று நீங்கள் பார்த்ததால் இப்போது எச்சரிக்கை செய்து பேசுகிறோம். இது சட்டப்படி குற்றம்’ என்று பேசுகிறார்.

அதற்கு பதில் அளித்த வாலிபர் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்து பேசுகிறார். இதைத்தொடர்ந்து அந்த போலீஸ்காரர் அந்த வாலிபரை மன்னித்து விடுவது போல் ஆடியோ முடிவடைகிறது. சமீபத்தில் இந்த ஆடியோ வைரலாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

சமீபத்தில் தமிழக போலீசார், ஸ்மார்ட் செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டரில் குழந்தைகளின் ஆபாச படத்தை டவுன் லோடு செய்து பார்ப்பதும், அதை செல்போனில் சேமித்து வைத்திருப்பதும் குற்றம் என்று அறிவித்துள்ளார்கள். இது தொடர்பாக சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீசார் ரேண்டம் எண் அடிப்படையில் சில குறிப்பிட்ட ஏரியாக்களில் உள்ள செல்போன் எண்களை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் மருதகுளம் அருகே உள்ள செல்போன் கோபுர அலைவரிசையில் இருந்து 400 பேருக்கும் அதிகமானோர் குழந்தைகள் ஆபாச படத்தை டவுன்லோடு செய்து பார்த்ததை கண்டுபிடித்துள்ளார்கள். இதைதொடர்ந்து குறிப்பிட்ட 15 பேரின் செல்போனுக்கு போலீசார் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறு எச்சரிக்கை அனுப்பப்பட்ட 15 பேர்களில், அதையும் மீறி தொடர்ந்து குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்த சிலருக்கு போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு எச்சரிக்கை விடுத்த போது மருதகுளம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரிடம் பேசிய ஆடியோ தான், சமூக வலைதளத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் குழந்தைகள் ஆபாச படத்தை டவுன்லோடு செய்து பார்க்கும் வாலிபர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் குறையும் என்றும் இதன் காரணமாக சைபர் கிரைம் குற்றங்கள் குறையும் என்றும் போலீசார் கருதி வருகிறார்கள்.

குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்களின் செல்போன்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருவதாக வெளிவரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நெல்லை மட்டும் மல்லாது தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
Tags:    

Similar News