செய்திகள்
கொள்ளை நடந்த வீடுகளை படத்தில் காணலாம்.

ரெயில்வே அதிகாரி வீடு உள்பட 3 வீடுகளில் 50 பவுன் நகை கொள்ளை

Published On 2019-12-07 08:37 GMT   |   Update On 2019-12-07 08:37 GMT
உளுந்தூர்பேட்டையில் ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தென்றல் நகரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். சேலம் ரெயில்கோட்ட வணிக மேலாளராக உள்ளார். இவர் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டார். வீட்டில் உள்ளவர்கள் உறவினர்கள் வீட்டுக்கு சென்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

அதன்பின்னர் அருகில் தனியரசு வீட்டுக்கு சென்றனர். இவர் டிரைவிங் பள்ளி நடத்தி வருகிறது. இந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை திறந்து அதில் இருந்த நகை-பணத்தை திருடி சென்றனர்.

அக்கம்பக்கம் நோட்டமிட்ட கொள்ளையர்கள் அந்த பகுதியில் உள்ள ராஜராஜன் என்பவரது வீட்டுக்கு சென்றனர். இவர் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் ஆவார். இந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றனர். எனவே கொள்ளையர்கள் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை 3 வீடுகளும் திறந்து கிடந்ததால் வீட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீடுகளுக்கு விரைந்த வண்ணம் உள்ளனர்.

தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 3 வீடுகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். அப்போது 50 பவுன் நகை கொள்ளை போய் இருக்கலாம் என தெரியவந்தது. என்றாலும் வீட்டில் உள்ளவர்கள் வந்தபின்னர்தான் கொள்ளை போன முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து துப்புதுலக்கி வருகிறார்கள். விழுப்புரத்தில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சாலை ஓரம் நின்றது. எனவே கொள்ளையர்கள் சாலை வழியாக தப்பி சென்று இருக்கலாம் என தெரியவந்து உள்ளது.

ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Tags:    

Similar News