செய்திகள்
மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று வாழைத்தார்கள் விற்கப்படும் காட்சி.

போச்சம்பள்ளி பகுதிகளில் வாழைத்தார்கள் விலை வீழ்ச்சி- விவசாயிகள் கவலை

Published On 2019-12-06 16:20 GMT   |   Update On 2019-12-06 16:20 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் வாழைத்தார்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள புலியூர், அ.அரசம்பட்டி, எலுமிச்சைபள்ளம், பண்ணந்தூர் உள்ளிட்ட பல இடங்களில் ஏக்கர் கணக்கில் பூவன், கற்பூரவள்ளி மொந்தன், ரஸ்தாளி உள்ளிட்ட பல ரக வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் இருந்து வெட்டப்படும் வாழைத்தார்கள் தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் சந்தைகள் கூடும் இடங்கள் என பல இடங்களுக்கு கொண்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வாழைப்பழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வாழைத்தார்களை கொள்முதல்செய்ய வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் வாழைப்பழம் அழுகும்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து இயற்கை முறையில் பழுக்கவைத்து வியாபாரம் செய்யும் வியாபாரி கூறுகையில், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் அதிக சுவையுடன் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வருகை தந்து கொள்முதல் செய்கின்றனர். ஆனால் கடந்த சில வாரங்களாக வியாபாரிகள் வருவதில்லை. எனவே வாழைமரத்தில் வாழைத்தார்கள் வெட்டாமல்  உள்ளன. அதாவது 150 பழம்கொண்ட வாழைத்தாரை ரூ.600 வரை விற்பனை செய்துவந்தோம். ஆனால் கடந்த சில நாட்களாக 100 ரூபாய்க்குகூட வாங்க வியாபாரிகள் முன்வருவதில்லை. எனவே தற்போது வாழைப்பழம் விலை குறைந்துவிட்டது. வாழை விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்திக்க வேண்டிய அபாயம் உள்ளது.

மேலும், வாழை வியாபாரிகள் கூறுகையில், சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது என பரவலாக கருதப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதாலும் வாழை மரத்தில் தார்கள் நன்கு விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாழை மரத்தில் பழுக்க தொடங்கியதால், இதனை விவசாயிகள் இருசக்கர வாகனங்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர் என்றனர்.
Tags:    

Similar News