செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

புதிய மருத்துவக்கல்லூரிகள் 11 மாதத்தில் செயல்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Published On 2019-12-06 11:39 GMT   |   Update On 2019-12-06 11:39 GMT
புதிய மருத்துவக்கல்லூரிகள் 11 மாதத்தில் செயல்படும் என்று சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

திண்டுக்கல்:

தமிழ்நாடு சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திண்டுக்கல்லில் நடந்த ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உடல் உறுப்பு, ரத்தம், கண்தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடமாக திகழ்கிறது. மொத்தம் 8 லட்சம் பாக்கெட்டுகள் ரத்தம் தேவைப்படும் நிலையில் அரசு ஆஸ்பத்திரிகள் மூலம் 4 லட்சம் பாக்கெட்டுகள் பெறப்படுகிறது.

மற்றவை தன்னார்வ ரத்ததானம் செய்பவர்களால் சேகரிக்கப்படுகிறது. எனவே ரத்ததானம் செய்ய தகுதியுடைய அனைவரும் முன்வரவேண்டும். ஒரே ஆண்டில் 9 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சாதனையாகும். திண்டுக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மருத்துவ கல்லூரி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ. ஆகியோரின் முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 137.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் ஏலம் மூலம் டெண்டர் விடப்பட உள்ளது. இதன்மூலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு 150 இடங்கள் இங்கே கிடைக்கும். அனைத்து மருத்துவக்கல்லூரிகளும் 11 மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இணை இயக்குனர் பூங்கோதை, துணை இயக்குனர்கள் நளினி, ராமச்சந்திரன், நிலைய மருத்துவர் சுரேஷ்பாபு, டாக்டர் பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News