செய்திகள்
கோப்பு படம்

தொடர்மழை காரணமாக களக்காடு பகுதியில் 30 குளங்கள் நிரம்பின

Published On 2019-12-05 12:07 GMT   |   Update On 2019-12-05 12:07 GMT
களக்காட்டில் தொடர்மழை காரணமாக அப்பகுதியில் உள்ள 30 குளங்கள் நிரம்பியது. விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
களக்காடு:

களக்காடு, திருக்குறுங்குடி, மாவடி, டோனாவூர், பத்மநேரி, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மாத தொடக்கத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. முதலில் மழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது. விட்டு, விட்டு மிதமான அளவில் மழை பெய்து வந்தது. கடந்த வாரம் மழை தீவிரமடைந்தது. விடிய, விடிய கனமழை கொட்டியது. இதன் காரணமாக களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால்வாய், உப்பாறு, பச்சையாறு மற்றும் கால்வாய்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டது.

இதனை தொடர்ந்து களக்காட்டில் உள்ள தாமரைக்குளம், சிதம்பரபுரம் பழங்குளம், மேலப்பத்தை பிரவிளாகம்குளம், மாடன்குளம், பாப்பான்குளம், கீழப்பத்தை பெரியகுளம், பத்மநேரி பெரியகுளம், மலையநேரிகுளம், பிராங்குளம், சீவலப்பேரி பெரியகுளம், திருக்குறுங்குடி பெரியகுளம், மலையடிபுதூர் தாமரைகுளம் உள்பட 30-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி மறுகால் விழுந்தது.

மேலும் பல்வேறு குளங்கள் நிரம்பி வருகின்றன. குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நெல் நடுகை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 85 சதவிகித நடுகை பணிகள் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் குளம் நிரம்பவில்லை. இதனால் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்தனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News