செய்திகள்
முதல்வர் பழனிசாமி பேட்டி

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு மேலும் ரூ.6 லட்சம் - முதல்வர் பழனிசாமி

Published On 2019-12-03 11:48 GMT   |   Update On 2019-12-03 11:48 GMT
மழையால் வீடுகளின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேலும் 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.
கோயம்புத்தூர்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மழையின் காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்ட இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவருடன் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் இருந்தனர்.

அதன்பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

17 பேர் இறந்தது வேதனையளிக்கிறது. குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம், இரங்கல். சுற்றுச்சுவர் கட்டிய சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சட்ட ரீதியாகவே இந்த விவகாரத்தை அணுக முடியும். சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு மேலும் தலா ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதையடுத்து, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை ரூ.10 லட்சம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. 

மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும். மேட்டுப்பாளையம் நடூரில் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

அந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News