செய்திகள்
ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

ஒரே அணியில் இணைந்து போட்டி: அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள ரஜினி-கமல் திட்டம்

Published On 2019-11-26 09:59 GMT   |   Update On 2019-11-26 09:59 GMT
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து திராவிட கட்சிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்கபோவதாக அறிவித்தார். அதன் பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டாலும் 2 ஆண்டுகள் முழுமையாக கடந்த நிலையில் இன்னும் கட்சி அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும் பல்வேறு பிரச்சினைகளில் கருத்து தெரிவித்து பரபரப்புகளை ஏற்படுத்தியே வருகிறார். 2017-ம் ஆண்டு மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பிலேயே சிஸ்டம் சரியில்லை என்று அரசியலை குறை சொன்னார்.

தான் அரசியலுக்கு வந்தால் அது ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று சொன்னவர் ரசிகர்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்பதையும் அறிவித்தார். அதன் பின்னர் ஸ்டெர்லைட் போராட்டம், ராஜீவ் கொலையாளிகள் போன்ற வி‌ஷயங்களில் ரஜினி சொன்ன கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மோடிக்கு ஆதரவாக ரஜினி கொடுத்த பேட்டிகளும் பரபரப்பானது. பா.ஜனதா தலைவர்கள் சிலர் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக பார்த்ததாலும் மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி பேட்டிகள் அளித்ததாலும் அவர்மீது பா.ஜனதா ஆதரவாளர் என்ற பிம்பம் விழுந்தது.

ரஜினி இதையும் சமீபத்திய பேட்டியில் உடைத்தார். தன் மீது காவி சாயம் பூச முயற்சிகள் நடப்பதாக கூறினார்.

சமீபத்தில் கமல் விழாவில் பேசிய ரஜினிகாந்த், “2 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அதிசயம், அற்புதம் நடந்தது. நாளையும் அதிசயம், அற்புதம் நடக்கும்“ என்று குறிப்பிட்டார்.    

மேலும், கமலுக்கும் எனக்கும் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்தால், எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள மாட்டோம்“ என்றும் குறிப்பிட்டார்.

கமல்ஹாசனை பொறுத்தவரை ரஜினியை போல அரசியலுக்கு வரும் விருப்பத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்தியது இல்லை. ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க அமைச்சர்களை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். தான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அரசியல் பேச தொடங்கினார்.

பிறகு, தான் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தார். அதன்படியே கடந்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் துவங்கினார். கட்சியை துவக்கி வைத்து பேசிய கமல், ‘’மக்களின் நீதியை மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. நீங்கள் வலதா, இடதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள், எந்த பக்கமும் ஒரே அடியாக சாய்ந்து விடமாட்டோம். அதற்குதான் மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்துள்ளோம்‘’ என்றார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், சட்ட மன்ற இடைத்தேர்தல்களில் அவரது கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் அவர் சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும் கூட சில தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் கிடைத்தன.

4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்தன. 11 தொகுதிகளில் 3வது இடம் பெற்றது. இது கமல்ஹாசனுக்கும் அவரது கட்சியினருக்கும் உற்சாகத்தை அளித்தது. அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் வேகமாக அடியெடுத்து வைத்து வருகிறார்.

2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கமல்ஹாசனுடன் கைகோர்த்துள்ளார்.

இந்த சூழலில் தான் கமலின் பிறந்தநாள் நிகழ்ச்சி ரஜினி, கமல் கைகோர்ப்புக்கான அடித்தளமாக அமைந்து விட்டது. கமல் ஆரம்பம் முதலே ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக தான் இருந்தார். இப்போது ரஜினியும் ஆர்வம் காட்டுவதால் இந்த கூட்டணிக்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன.

ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார், அப்படி அரசியலில் இறங்கும்போது அவரும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்து செயல்படுவார்களா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. கமலும் ரஜினியும் இணைந்து செயல்படுவார்களா, அப்படி இணைந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

கமலுக்கு தேர்தலை சந்தித்த அனுபவம் இருக்கிறது. ரஜினிக்கு கிராமப்புறங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இருவரும் இணைவது என்பது இருவருக்குமே நன்மை தரும் ஒன்றாக இருக்கும். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பார்கள். ஒருவேளை ரஜினி கமலுடன் கூட்டணி வைத்தால் அது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம்.

சினிமாவில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே பெரும் வெற்றியை பெற்றுள்ளன. அதேபோல் அரசியலிலும் இருவரையும் இணைத்து பெரிய வெற்றியை அடைய வைக்க தீவிர முயற்சிகள் நடக்கின்றன. இருவரும் இணைவதற்கான தொடக்க கட்ட பேச்சுவார்த்தைகளும் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி, கமல் இருவரும் ஒரே காலகட்டத்தில் தனித்தனி பாணி நடிப்பால் தமிழக மக்களை கவர்ந்தவர்கள். சினிமாவில் பலத்த போட்டி இருவருக்கு இடையேயும் இருந்தாலும் தொடக்கம் முதலே இணை பிரியாத நண்பர்களாக இருந்து வருபவர்கள். இதே நட்பு அரசியலில் கூட்டணியாக மாறினால் அது தமிழக அரசியல் வரலாற்றிலேயே பெரும் திருப்புமுனையாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது என்று கிட்டத்தட்ட முடிவு செய்தாகிவிட்டது என்று இரு தரப்பிலுமே செய்திகள் கசிகின்றன. இருவரும் இணைந்து இரண்டு திராவிட கட்சிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு இருப்பது தெரிய வருகிறது.

இந்த முடிவு இன்று திடீரென எடுக்கப்பட்டதா? அல்லது ஒரு சில நாட்களுக்கு முன்னரே திட்டமிட்டதா? என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கமல் மற்றும் ரஜினி ஆகிய இரு தரப்பு ரசிகர்களுக்கும் திடீர் அதிர்ச்சி தராமல் கொஞ்சம் கொஞ்சமாக இதுகுறித்து பூடகமாக செய்தியை இருவரும் தந்துள்ளனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

ரஜினி, கமல் இருவருக்கும் நெருக்கமான அரசியல் விமர்சகர்கள், தொழிலதிபர்கள் சிலர் இந்த இணைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருவரும் இணைந்தால் யார் தலைமையில் அந்த கூட்டணி இருக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது. ஒருவேளை எடப்பாடி ஓபிஎஸ் போல அதிகாரங்களை பிரித்துக்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News