செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

ஆசிரியர் தேர்வில் குளறுபடி: தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Published On 2019-11-25 22:26 GMT   |   Update On 2019-11-25 22:26 GMT
ஆசிரியர் தேர்வாணைய தேர்வில் குளறுபடிக்கு காரணமான அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகளில் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக வேதியியல் பாடத்திற்கு 121 பின்னடைவு பணியிடங்கள் உள்பட மொத்தம் 356 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இவற்றில் 121 பின்னடைவு பணியிடங்கள் தவிர மீதமுள்ள 235 பேர் 69 சதவீத இட ஒதுக்கீட்டு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 121 பின்னடைவு பணியிடங்களை பொறுத்தவரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 74, பட்டியல் இனத்தவர் 35, அருந்ததியர் 10, பொதுப்பிரிவு ஊனமுற்றோர் 2 என்ற விகிதத்தில் நிரப்பப்பட வேண்டும். அதுதான் சமூக நீதிக்கு ஏற்றதாக அமையும். ஆனால் காலியிடங்கள் அவ்வாறு நிரப்பப்படவில்லை. மாறாக 356 பணியிடங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியலில் முன்னணியில் உள்ளவர்களை பொதுப்பட்டியலில் தான் சேர்க்க வேண்டும். பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட்ட பிறகே அவர்கள் இடஒதுக்கீட்டு பிரிவில் சேர்க்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் பல முறை தீர்ப்பளித்துள்ளன. அவ்வாறு இருக்கும்போது பொதுப்பிரிவில் சேர்க்கப்பட வேண்டிய 34 மிகவும் பிற்படுத்தப்பட்டோரையும், 5 பட்டியலினத்தவரையும் இடஒதுக்கீட்டு பிரிவில் சேர்த்தது அநீதியாகும். சமூக நீதிக்கு எதிரான அதிகாரிகள் தான் இந்த துரோகத்தை செய்திருக்க வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்தி இதற்கு காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

நடப்பு காலியிடங்களுக்கும், பின்னடைவு பணியிடங்களுக்கும் தனித்தனியாக தரவரிசை பட்டியல் தயாரித்தும், அதில் முதல் 67 இடங்களுக்குள் வந்துள்ள 34 மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், பட்டியலினத்தை சேர்ந்த 5 பேரையும் பொதுப்பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அந்த பிரிவுகளை சேர்ந்த அதே எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி இன்னும் தேர்வு பட்டியல் வெளியிடப்படாத தமிழ், பொருளாதாரம், வரலாறு, உயிரி-வேதியியல் பாடங்களுக்கான ஆசிரியர் தேர்விலும் இதேபோன்ற தவறுகள் நடந்திருக்க வாய்ப்புகள் இருப்பதால், அந்த பட்டியல்களையும் சரிபார்த்து வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News