செய்திகள்
துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வில் வெற்றிடம் இல்லை: வெற்றி தான் இருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2019-11-24 20:08 GMT   |   Update On 2019-11-24 20:08 GMT
அ.தி.மு.க.வில் வெற்றிடம் இல்லை, வெற்றி தான் இருக்கிறது என்று பொதுக்குழுவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை தந்து தமிழக மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார்கள். தி.மு.க. எம்.பி.க்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? என்பது தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலினுக்கும் தெரியவில்லை. வாக்களித்த மக்களுக்கும் தெரியவில்லை. தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தி.மு.க. எம்.பி.க்களுக்கும் தெரியவில்லை.

தி.மு.க.வின் பசப்புறைகள் மக்களுக்கு தெரிந்துவிட்ட காரணத்தால், காற்று திசைமாறி நம் பக்கம் அடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதுதான் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் புயலாக மாறி, தி.மு.க.வையும், காங்கிரசையும் தூக்கிவீசி, அ.தி.மு.க.வுக்கு வெற்றியை வழங்கியிருக்கிறது.

மக்கள் சக்தி என்னும் அந்த புயல் காற்று, அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக சுழன்றடிக்கும் சூறாவளி காற்றாக மாறும். இதனால், தி.மு.க.வின் கதி என்னவாகப்போகிறது என்று கலங்கிப்போய் இருக்கிறார் மு.க.ஸ்டாலின். தேர்தல் களத்தில் எதிரணியினரை டெபாசிட் இழக்கச்செய்ய நம் தொண்டர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வெற்றி என்பது அ.தி.மு.க.வின் நிரந்தர சொத்து. ஜெயலலிதா மறைந்த பிறகு, விசுவாசமிக்க ஒவ்வொரு தொண்டனும் நம் இயக்கத்தை இரும்பு கோட்டையாக இருந்து பாதுகாத்து வருகின்றனர். இப்போது நம் இயக்கம் 1½ கோடி தொண்டர்களையும், 3 கோடி கரங்களையும் கொண்டிருக்கிறது. இந்த 3 கோடி கரங்களும் ஒன்றிணைந்து வருகின்ற தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் கலங்கடிப்போம்.

தமிழகத்தின் ஏன், இந்தியாவின் அரசியல் வரலாற்றில் ஒரு தனிப்பட்ட கட்சி தமிழகத்தில் 29 ஆண்டுகள் ஆளுகின்ற வாய்ப்பை பெற்றிருக்கின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். மற்ற எந்த கட்சிக்கும் இல்லை.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பொதுக்குழு, செயற்குழுவில், கட்சியின் அனைத்து நல்ல உள்ளங்களையும் ஒற்றுமைப்படுத்தி, இந்த 2 ஆண்டு காலத்தில் அ.தி.மு.க. வலுவான இயக்கமாக இருந்துவருகிறது. அதனால் தான் வலுவான ஆட்சியை தமிழக மக்களுக்கு தந்துகொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு என்ன தேவையோ, அது இப்போது மக்களுக்கு சென்றுகொண்டிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் பாராட்டும் நல்ல சூழலை நாம் உருவாக்கி இருக்கிறோம்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை தமிழக மக்கள் தந்திருக்கிறார்கள். தொடர்ந்து அ.தி.மு.க. தான் தமிழத்தை ஆளும் என்ற நல்ல தீர்ப்பையும் வழங்கியிருக்கிறார்கள். சில நேரங்களில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்துவிடும் போதும், சோர்வறியாத தொண்டர்களின் உழைப்பும், தியாகமும் தான் மீண்டும் நமக்கு வெற்றியை தேடிக்கொடுக்கிறது.

ஏதோ இங்கே வெற்றிடம் இருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். இங்கு வெற்றி இருக்கிறதே தவிர, எந்தவித வெற்றிடமும் இல்லை என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அந்த வெற்றியை யாராலும் பறிக்க முடியாது.

சிங்கத்தின் கோட்டையில் சலசலப்பு வராதா? என சிறு நரிகள் கூட்டம் நாலாபுறமும் காத்திருக்கிறது. ஜெயலலிதா வழியில் குறை இல்லாமல் நிறைவான ஆட்சியை வழங்கிக்கொண்டிருக்கிறோம். உண்மையான மக்களாட்சியை நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்திருக்கிறோம். ஒரே சமயத்தில் 6 மருத்துவ கல்லூரிகளுக்கான அனுமதியை நாம் பெற்றிருக்கிறோம். எதிர்காலத்தில் தமிழகத்தை பொன் விளையும் பூமியாக மாற்ற புரட்சிகரமான திட்டங்களுக்கு ஒப்புதலும் பெற்றிருக்கிறோம்.

நல்லாட்சிக்கு இலக்கணமாக திகழும் நாம், உள்ளாட்சியிலும் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கெல்லாம் தேவையானது ஒற்றுமை ஒன்று தான். அது இருந்தால் இருவிரல் புரட்சி நிச்சயம் ஏற்படும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதுதான் நம்மை விட்டுச்சென்ற ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன். அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News