செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பிசான பருவ சாகுபடி- 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

Published On 2019-11-23 09:58 GMT   |   Update On 2019-11-23 09:58 GMT
கடனா, ராமநதி, அடவிநயினார், கருப்பாநதி ஆகிய அணைகளில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், முக்கிய அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை ஏற்று கடனா, ராமநதி, அடவிநயினார் மற்றும் கருப்பாநதி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இவ்வணைகளின் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் நடப்பாண்டு பிசான சாகுபடி செய்வதற்காக தண்ணீர் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று, கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களில் இருந்து பிசான சாகுபடிக்கு 26-11-2019 முதல் 29-3-2020 வரை 125 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களில் உள்ள 32,024.58 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுகப் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News