செய்திகள்
பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

உடுமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2019-11-22 14:35 GMT   |   Update On 2019-11-22 14:35 GMT
உடுமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடுமலை:

உடுமலையை அடுத்துள்ளது பூலாங்கிணர் ஊராட்சி. உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் பிரதான குடிநீர் குழாய் வாளவாடி பகுதியில் அடிக்கடி பழுதடைந்துவிடுவதால் குடிநீர் சரியாக வருவதில்லை.

இதனால் இந்த பகுதிக்கு இந்த திட்டத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகிக்காததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். குடிநீர் தட்டுப்பாடு காரணமாக விலைக்கு தண்ணீரை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த ஊராட்சி பகுதியைச்சேர்ந்த 150 பெண்கள் உள்பட 200 பேர் சீரான குடிநீர் வழங்க கோரி நேற்று காலை பூலாங்கிணரில் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தனர். அங்கு காலிக்குடங்களுடன் சாலையில் உட்கார்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். சீரான குடிநீர் வழங்க வேண்டும் என அவர்கள் கோ‌‌ஷமிட்டனர். இதனால் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் இருபுறமும் பஸ், கார், லாரி, வேன் ஆகிய வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு நின்றிருந்தன.

இது குறித்து தகவல் கிடைத்ததும் உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, ஆனந்தகிரு‌‌ஷ்ணன், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்தனர். அத்துடன் குடிநீர் வடிகால் வாரிய இளநிலைப் பொறியாளர் ரவிச்சந்திரன், உடுமலை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்சாமி, செல்வகுமார் ஆகியோரும் அங்கு விரைந்து வந்தனர்.

அங்கு சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருமூர்த்தி அணையில் இருந்து பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பூலாங்கிணர் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் உரிய திட்ட அளவின் படி சீரான குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News