செய்திகள்
விபத்து

நாங்குநேரி அருகே இருவேறு விபத்து- விவசாயி உள்பட 5 பேர் படுகாயம்

Published On 2019-11-22 10:23 GMT   |   Update On 2019-11-22 10:23 GMT
நாங்குநேரி அருகே இருவேறு விபத்தில் விவசாயி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

பாளை என்.ஜி.ஒ.பி காலனியை சேர்ந்தவர் தியாகரன் (வயது 63). தனியார் பஸ் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். சம்பவத்தன்று இவரும், என்.ஜி.ஒ.ஏ. காலனியை சேர்ந்த ராமசாமி மகன் ஜீவா, பழனிமுருகன் மகன் மாரியப்பன் ஆகியோரும் தியாகரனுக்கு சொந்தமான காரில் நாகர்கோவில் சென்று விட்டு நெல்லைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

நாங்குநேரி அருகே உள்ள குறிஞ்சி நகர் விலக்கில் வந்த போது, எதிரில் ராதாபுரத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் ஓட்டி சென்ற கார் திடீரென ரோட்டின் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய 2 கார்களும் எதிர்பாராதவிதமாக மோதின. இதில் தியாகரன் ஓட்டி வந்த காரின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் காரில் இருந்த ஜீவா, மாரியப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சந்தானம் (60), விவசாயி. சம்பவத்தன்று இவர் வாகைகுளத்தில் டீ குடித்து விட்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் சந்தானம் படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் பைக்கை ஓட்டி வந்த தூத்துக்குடியை சேர்ந்த ஜெயராமன் மகன் சுதந்திரராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் பள்ளியாடியை சேர்ந்தவர் சீதாராம் மகன் ஜெயராம். இவரும், இவரது மனைவி ஞானஜெமிலாவும் நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி கோவிலுக்கு வந்தனர். பின்னர் பைக்கில் பள்ளியாடிக்கு திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை ஜெயராம் ஓட்டினார். சிறுமளஞ்சி விலக்கு பகுதியில் வந்த போது பைக்கின் டயர் பஞ்சரானதால் பைக் நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் ஜெயராமும், ஞானஜெமிலாவும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News