செய்திகள்
திருமாவளவன்

ரஜினி-கமல் இணைவது தனிப்பட்ட பிரச்சனை: திருமாவளவன்

Published On 2019-11-22 09:34 GMT   |   Update On 2019-11-22 09:50 GMT
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைவது நாட்டு மக்களின் பிரச்சனை அல்ல, அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
அவனியாபுரம்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை தேர்தலில் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தற்போது மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார்.

2009-ல் லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து இனப்படுகொலை செய்த ராஜபக்சே குடும்பம் இப்போது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து இருப்பது தமிழ்ச் சமூகத்திற்கு பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

கோத்தபய ராஜபக்சே பதவியேற்றவுடன் ராமேசுவரம் பகுதியில் இருந்து கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ஏறத்தாழ 3000 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட நிலையில் மீன் பிடிக்காமல் கரையேறி இருக்கிறார்கள்.

ராஜபக்சே குடும்பம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல தமிழத்தில் உள்ள தமிழர்களுக்கும் பெரும் தீங்கு விளையும் என்பதற்கு இது ஒரு சான்று.

இந்த நிலையில் வருகிற 29-ந்தேதி கோத்தபய ராஜபக்சே டெல்லிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாளை சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

புத்தர், திருவள்ளுவர், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் சனாதனத்தை எதிர்த்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியும் எதிர்க்கிறது.


சோனியா காந்திக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் அது அரசியல் நாகரீகம் இல்லை என்று தான் கூறவேண்டும்.

இந்திராகாந்தி , ராஜீவ் காந்தி கொல்லப்பட்டனர். அரசியல் ரீதியாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கின்ற குடும்பத்தின் மீது நரேந்திர மோடி அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். சோனியா காந்திக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை திரும்பப் பெற்றது நரேந்திர மோடி அரசியல் பகையைத் தான் வெளிப்படுத்துகிறது. பெருந்தன்மையை வெளிப்படுத்தவில்லை.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைவது நாட்டு மக்களின் பிரச்சனை அல்ல. அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனை. அதிசயம் நடக்கும் என ரஜினி கூறி உள்ளார். அவர் இமயமலை சென்று திரும்பி இருக்கிறார் என நினைக்கிறேன். இமயமலையில் யாராவது அவரிடம் சொல்லி இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News