செய்திகள்
கைது

8 இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது

Published On 2019-11-22 09:04 GMT   |   Update On 2019-11-22 09:04 GMT
ஒரத்தநாடு அருகே 8 இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் சந்தோஷ் (வயது 23). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கருவிழிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த சத்யா (20) என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது காதல் மனைவியை அழைத்துக்கொண்டு திருப்பூரில் குடும்பம் நடத்தினார்.

இந்த நிலையில் வேலைக்கு சென்று வந்த சந்தோஷ் கடந்த 1½ மாதங்களுக்கு பிறகு திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா, சந்தோசை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

இதையடுத்து திருப்பூர் போலீசில் அவர் புகார் செய்தார். அதில் மாயமான தனது கணவரை மீட்டு தரும்படி தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்தோசை தேடி வந்தனர்.

இதற்கிடையே வாலிபர் சந்தோஷ், திருப்பூரை சேர்ந்த சசிகலா (19) என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒக்கநாடு கீழையூரில் குடித்தனம் நடத்தி வருவதாக சத்யாவுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் கடும் ஆத்திரம் அடைந்தார்.

இதையடுத்து அவர் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஒக்கநாடு கீழையூருக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு ஒரு வீட்டில் குடும்பம் நடத்தி வந்த சந்தோஷ், சசிகலாவை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதன்பின்னர் சத்யாவை ஏமாற்றி சசிகலாவை திருமணம் செய்த சந்தோசை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் சந்தோசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் இதுபோல் 8 இளம்பெண்களை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்தது தெரிய வந்தது. வாலிபர் சந்தோஷ், இளம்பெண்களிடம் நைசாக பேச்சு கொடுத்து காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து கொள்வாராம். சில மாதங்கள் குடும்பம் நடத்தி விட்டு அந்த பெண்ணை தவிக்க விட்டு சென்று விடுவாராம். இதேபோல் 8 இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.


Tags:    

Similar News