செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை

Published On 2019-11-22 06:54 GMT   |   Update On 2019-11-22 09:45 GMT
கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற தமிழக அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
சென்னை:

தமிழகத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராதா கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சே‌ஷசாயி ஆகியோர் இந்த அரசாணை இந்து கோவிலுக்கு மட்டும்தான் பொருந்துமா? எத்தனை கோவில் சொத்துக்களை எத்தனை பேர் ஆக்கிரமித்துள்ளனர்? என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

பின்னர், இந்த அரசாணைக்கு தடை கேட்ட இடைக்கால மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தனர். இந்த நிலையில் இடைக்கால மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் இன்று வழங்கினர். அதில் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

தமிழகம் முழுவதும் எத்தனை கோவில் சொத்துக்களை எத்தனை பேர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? உள்ளிட்ட விவரங்களை கொண்ட அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News