செய்திகள்
உயர்நீதிமன்ற மதுரை கிளை

மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

Published On 2019-11-21 05:42 GMT   |   Update On 2019-11-21 05:42 GMT
மேயர். நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் முறையீடு செய்தார்.
மதுரை:

தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை நேரடியாக தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, மறைமுகமாக தேர்ந்தெடுக்க வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 

இதன்மூலம் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை மக்கள் நேரடியாக ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பதற்கு பதிலாக, கவுன்சிலர்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பார்கள். இதேபோல் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்வார்கள். 

இந்த அவசர சட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு இந்த விஷயத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த நடைமுறை குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளனர்.



இந்நிலையில், மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்வது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர் நீலமேகம் முறையிட்டார். தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

அப்போது, அவரது முறையீடு தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News