செய்திகள்
கொலை

மதுரையில் கள்ளக்காதல் தகராறில் பால் வியாபாரி கொலை

Published On 2019-11-20 11:55 GMT   |   Update On 2019-11-20 11:55 GMT
மதுரையில் கள்ளக்காதல் தகராறில் பால் வியாபாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை:

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சந்திர சேகர். இவரது மகன் ரமேஷ் (வயது 30). பால் வியாபாரம் செய்து வந்தார். திருமணமான இவர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ரமேசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவரின் மகள் காளீஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுகுறித்து காளீஸ்வரியின் தம்பி செல்வம் மற்றும் ரமேஷ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ரமேஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்தில் ரமேஷ் பலியானார்.

தகவல் அறிந்ததும் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) கார்த்திக் மற்றும் திருப்பரங்குன்றம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம், அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செல்வம் உள்ளிட்ட 4 பேரை அவனியாபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.

கொலையில் துப்பு துலக்க சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று படுத்துக் கொண்டது.

நள்ளிரவில் பால் வியாபாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News