செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

முல்லைபெரியாறு, வைகை அணை நீர்மட்டம் சரிவு

Published On 2019-11-20 10:15 GMT   |   Update On 2019-11-20 10:15 GMT
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் முல்லை பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் சரியத் தொடங்கியுள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் கன மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் முல்லைப் பெரியாறு, வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் 2 மாதங்களாக சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவில் நீடிப்பதால் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கார்த்திகை மாதம் பிறந்ததில் இருந்து மழை குறையத் தொடங்கியது. தற்போது பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதி கூடலூர், லோயர் கேம்ப், உத்தமபாளையம், கம்பம், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை குறைந்து பனியின் தாக்கமே அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு 1478 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 1600 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் நீர்மட்டம் 128.40 அடியாக சரிந்துள்ளது. இதே போல் வைகை அணை நீர்மட்டமும் 59.65 அடியாக குறைந்துள்ளது.

அணைக்கு 1971 கனஅடி நீர் வருகிறது. பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 2028 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.70 அடியாக உள்ளது. 32 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.44 அடியாக உள்ளது. 78 கன அடி நீர் வருகிற நிலையில் 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
Tags:    

Similar News