செய்திகள்
கமல்ஹாசன்

ரஜினியுடன் அவசியம் ஏற்பட்டால் இணைவேன் - கமல்ஹாசன்

Published On 2019-11-20 08:08 GMT   |   Update On 2019-11-20 09:27 GMT
அவசியம் ஏற்பட்டால் நானும் ரஜினியும் இணைவோம் என்றும் ரஜினியுடன் இணைவது என்பது எங்கள் நட்பை விட முக்கியமான செய்தி என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
  • ரஜினியுடன் இணைவது எங்கள் நட்பை விட முக்கியமான செய்தி
  • எங்கள் இருவரின் நட்பை விட தமிழகத்தின் நலன்தான் முக்கியம்
  • தமிழகத்திற்காக உழைப்போம் என்பதுதான் இணைப்பின் முக்கிய செய்தி


சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு ஒடிசா பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

டாக்டர் பட்டம் பெற்ற கமல்ஹாசன் நேற்று இரவு சென்னை திரும்பினார். இன்று காலை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த கட்சி பொறுப்பாளர்கள் கட்சி அலுவலத்தில் கமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

கட்சியின் தலைமை அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை செய்தார்.



 
இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தலைமை நிர்வாகிகள் மகேந்திரன், ஏஜி.மவுரியா, ஸ்ரீபிரியா, கமீலா நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் கூறியதாவது:-

“நெகிழ்ந்து போயிருக்கும் என்னை வந்து வாழ்த்தி மேலும் நெகிழ செய்திருக்கிறீர்கள்.

நான் டாக்டர் பட்டம் வாங்குவதற்கு 65 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. ஆனால் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் போன்றோர் எனக்கு முன்பே படித்து பட்டம் வாங்கிவிட்டார்கள். எனக்காக நீங்கள் காட்டும் அன்பை தமிழக மக்களுக்கும் காட்ட வேண்டும்.

நீங்கள் காட்டிய அன்பு செயல் வடிவமாக மாற வேண்டும். தமிழகத்திற்கு பயனுள்ளதாக மாற வேண்டும். வேலை வாய்ப்பு, விவசாயம் துறைகள் முதலுதவி தேவைப்படும் துறைகள் என்பதை உணர்ந்துள்ளோம்.

ஆட்சிக்கு வந்து செய்வதைப்போல, அதற்கு முன்பே வேலைவாய்ப்பு, விவசாயம் துறைகளை மேம்படுத்தும் பணிகளை செய்வோம். ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்கி விட்டோம். விரைவில் நாம் செயல்படுவோம்’ என்று கூறினார்.



அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கமல் கூறியதாவது:-

‘அவசியம் ஏற்பட்டால் நானும் ரஜினியும் இணைவோம் என்று சொன்னேன். ரஜினியுடன் இணைவது என்பது எங்கள் நட்பை விட முக்கியமான செய்தி.

தமிழகத்திற்காக உழைப்போம் என்பதுதான் இணைப்பின் முக்கிய செய்தி. என்னுடைய பணியை நான் செயலில் காட்ட உள்ளேன். இணையும் தேதி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. எங்கள் இருவரின் நட்பை விட தமிழகத்தின் நலன்தான் முக்கியம்’.

இவ்வாறு அவர் கூறினார்.

மகளிரணி நிர்வாகி ஸ்ரீபிரியா அளித்த பேட்டியில் ‘ரஜினியும் கமலும் இணைந்து செயல்பட்டாலும் கமல்தான் முதல்வர் வேட்பாளராக இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம்’ என்று கூறினார்.


Tags:    

Similar News