செய்திகள்
ரேசன் கடை

சர்க்கரை கார்டுகள் அரிசி கார்டுகளாக மாற்ற விண்ணப்பிக்கலாம்: 26-ந்தேதி கடைசி நாள்

Published On 2019-11-20 06:58 GMT   |   Update On 2019-11-20 06:58 GMT
சர்க்கரை கார்டுதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி கார்டாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறி உள்ளார்.
சென்னை:

தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 99 லட்சம் ரே‌ஷன் கார்டுகள் உள்ளன. அரிசி வாங்கும் கார்டு, சர்க்கரை கார்டு, எந்த பொருளும் வாங்காத வெள்ளை நிற கார்டு என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.

அரிசி கார்டுகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும். சர்க்கரை கார்டுகளுக்கு அரிசி தவிர்த்த மற்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்கள் ஓரளவு வசதி படைத்தவர்கள். சம்பளம் அதிகம் வாங்குபவர்களாக உள்ளனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு அரசின் இலவச திட்டங்கள் உள்ளிட்ட சலுகைகள் பெறுவதற்கு அரிசி கார்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் சர்க்கரை கார்டுதாரர்களும் தங்களின் கார்டை அரிசி கார்டாக மாற்றி தரும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்களின் குடும்ப ஓட்டுகளை கவரும் வகையில் சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றி கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பொது விநியோக திட்டத்தில் தற்போது 10.19 லட்சம் சர்க்கரை கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகள் வைத்திருப்போரில் பெரும்பாலானோர் அரிசி பெறக்கூடிய கார்டாக மாற்றம் செய்து தர கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கு முதல்-அமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.

அதன்படி சர்க்கரை கார்டுதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி கார்டாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை தங்கள் ரே‌ஷன் கார்டு நகலை இணைத்து இன்று முதல் வருகிற 26-ந்தேதி வரை   https://www.tnpds.gov.in   என்ற இணையதள முகவரியிலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடம் சமர்ப்பிக்கலாம்.

இந்த கார்டுகளை தகுதி அடிப்படையில் அரிசி கார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பை தொடர்ந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News